×

ரஷ்யாவிடம் இருந்து சீனா வாங்கிய எஸ்-400 ஏவுகணை சோதனை வெற்றி

பீஜிங்: ரஷ்யாவில் இருந்து வாங்கிய எஸ்-400 ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கடந்த அக்டோபரில் எஸ்-400 என்ற ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்தது. தரையில் இருந்து வான்வெளியில் நீண்ட தூரம் சென்றும் தாக்கும் இந்த ஏவுகணையை சீனா எல்லையில் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு முன்பாகவே இந்த ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்க, கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் சீனா ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, ஏராளமான எஸ்-400 ஏவுகணைகளை சீனாவுக்கு ரஷ்யா சமீபத்தில் வழங்கியது. இந்த ஏவுகணையை வாங்கிய முதல் வெளிநாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது. வாங்கப்பட்ட இந்த ஏவுகணையை சீனா கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 250 கிமீ தூரத்தில் இருந்த நிலையை நொடிக்கு 3 கிமீ வேகத்தில் சென்று இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கியதாக அந்நாடு கூறியுள்ளது. ஆனால், எந்த இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பதை அது கூற மறுத்து விட்டது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் எதிரிகளின் போர் விமானங்கள், 600 கிமீ தொலைவில் உள்ள டிரோன்கள் ஆகியவற்றை தாக்கும் திறன்கொண்டது என ரஷ்யா இந்த ஏவுகணை பற்றி தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த சோதனை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : missile test winner ,Russia , China , Russia, S -400 missile
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...