×

மும்பை விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பு போதை மருந்து பறிமுதல்: வெனிசுலா நாட்டு பெண் கைது

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 3 கோடி போதை மருந்துடன் வெனிசுலா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வேதச விமான நிலையத்துக்கு வரும் விமானத்தில் பயணம் செய்யும் ஒரு பெண் போதை மருந்து கடத்தி வருவதாக விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானப் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

வெனிசுலா நாட்டை சேர்ந்த லூய்சா கார்சியா லோபஸ்(27) என்ற பெண் கொண்டு வந்த லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது மரத்தால் செய்யப்பட்ட 9 ஹேங்கர்கள் (துணிகளை தொங்கவிடுவது) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹேங்கர்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அதிகாரிகள், அந்த ஹேங்கர்களை ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, ஹேங்கர்களின் உள்பகுதியில் போதை மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதை உடைத்து அதில் இருந்த 1.2 கிலோ மெதாகுவாலோன் என்ற போதை மருந்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ஆகும்.

போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை கடத்தி வந்த லூய்சா கார்சியா கைது செய்யப்பட்டார். இவர் வெனிசுலாவில் உள்ள ஷா பாலோ நகரில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் மும்பை வந்துள்ளார். போதை மருந்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தென் மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கக் கூறி ஷா போலோ நகரில் தன்னிடம் தரப்பட்டதாகவும் லூய்சா கார்சியா முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதை மருந்தை கொண்டு வருவதற்காக பேட்ரிக் என்பவர் லூய்சா கார்சியாவுக்கு 5 ஆயிரம் டாலர் கமிஷனாக கொடுத்துள்ளார். லூய்சா கார்சியாவிடம் போதை மருந்து ஒப்படைக்கப்பட வேண்டிய மும்பை நபரின் தொடர்பு எண் எதுவும் இல்லை. லூய்சா கார்சியாவிடம் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drug confiscation ,Mumbai airport ,Venezuela , Mumbai airport, drugs, Venezuela, woman arrested
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்..!!