×

கருவில் உள்ள சிசுவுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முயற்சி எச்.ஐ.வி. பாதித்தவர் ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரையில் தீவிர சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் நேரில் விசாரணை

விருதுநகர்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக, சுகாதார செயலாளர் நேரில் விசாரணை நடத்தினார்.  அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்று  ஏற்படாமல் தடுக்க மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே ரத்ததானம் வழங்கிய வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன், மனைவி மீனா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). எட்டு மாத கர்ப்பிணியான மீனாவுக்கு, கடந்த டிச. 3ல் சாத்தூர் அரசு மருத்துவமனையில், சிவகாசி  ரத்தவங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது. இதையடுத்து அவருக்கு குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் நடந்த  பரிசோதனையில் மீனாவுக்கு ஏற்றப்பட்டது எச்ஐவி ரத்தம் என தெரிந்தது. இதன்மூலம் அவருக்கு எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மனோகரன் நடத்திய விசாரணையில்,  சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்த மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த நவ. 30ல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கொடுத்த ரத்தமே மீனாவுக்கு ஏற்றப்பட்டது என்பது தெரிய வந்தது.
இதற்கிடையே, மணி வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகாசி அரசு மருத்துவமனையை தொடர்பு  கொண்டு தனக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாகவும், தனது ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் ரத்த வங்கி ஸ்டாக்கில் இருந்த அந்த ரத்தமே தவறுதலாக மீனாவுக்கு ஏற்றப்பட்டுள்ளது.

இதிலிருந்தே மீனாவுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி தற்காலிக ஊழியர்களான வளர்மதி, கணேஷ்பாபு, ரமேஷ் ஆகியோர்  பணி நீக்கம் செய்யப்பட்டனர்.கலெக்டர் அலுவலகம் முற்றுகை:  சம்பவம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது கணவர் மற்றும் உறவினர்களும் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர்  இல்லாததால், டிஆர்ஓவிடம் மனு அளித்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து எஸ்பி ராஜராஜனிடமும் மனு அளித்து, அரசு மருத்துவமனையில் அலட்சியமாக இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், ரத்த  வங்கி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.நிவாரணம் வேண்டாம்: தகவலறிந்து நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசினார். அப் ேபாது முருகன், ‘எங்களுக்கு நிவாரணம் வேண்டாம். எனது மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றினால் போதும்’ என உருக்கமாக தெரிவித்தார். இதற்கு, சுகாதார செயலாளர், ‘தவறு நடந்ததை மறைக்க  விரும்பவில்லை. இருப்பினும் அதற்கான நிவாரணம் கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.
பின்னர் நிருபர்களிடம் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. தாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று, குழந்தைக்கு ஏற்படாதவாறு தற்போது மருந்து கொடுக்கப்பட்டு  வருகிறது. ஜனவரி 30ம் தேதி குழந்தை பிறக்கும் என தெரிகிறது. அதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் அரசு தரப்பில் தொடர் சிகிச்சை,  உயர்ரக தனியார் மருத்துவமனையில்  வைத்து சிகிச்சை அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. முதற்கட்டமாக ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 வாரத்தில் விசாரணை நடத்தி முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

பின்னர் மாலை 4 மணியளவில்  பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் சுகாதாரச் செயலாளரும் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘பெண்ணுக்கு சிகிச்சையை துவக்கி உள்ளோம். கருவில் உள்ள 8 மாத சிசுவுக்கு எச்ஐவி பரவாமல், தடுக்கும் சிகிச்சையில் முதல்  கவனம் காட்டப்படும். மீண்டும் நுண்ணிய ரத்த பரிசோதனைகள், சோதனைகள் செய்யப்படும். பரிசோதனை முடிவுகளுக்குப்பிறகு மேலும் சிகிச்சை தீவிரப்படுத்தப்படும்,’’ என்றார்.

காதல் திருமணம் செய்தவர்
கர்ப்பிணியின் கணவர் முருகன் கூறுகையில், ‘‘பட்டப்படிப்பு படித்தபோது, நாங்கள் காதலித்து, இருவீட்டாரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவிக்கு இதுவரை எந்த கஷ்டமும் கொடுத்ததில்லை.  அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று என்னை மிகவும் வாட்டுகிறது. தவறு செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். எனக்கோ, எனது மனைவிக்கோ அரசு வேலை போன்ற நிவாரணங்கள் பெரிதல்ல. என்னைப் போல  யாரும் இனி
பாதிக்கப்படக் கூடாது,’’ என்றார்.

ரத்த தானம் வழங்கியவர் தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே திருசிலுவையாபுரத்தை சேர்ந்தவர் மணி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ரத்தமே கர்ப்பிணி மீனாவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் பரவவே மணி, நேற்று காலை திடீரென  விஷம் (‘எலி பேஸ்ட்’) சாப்பிட்டுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு,  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணி சிவகாசி பட்டாசு ஆலையில் 2 ஆண்டுகள், அச்சு நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றி உள்ளார். இவரது அண்ணி கர்ப்பமாக இருந்தபோது, சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மணி  ரத்த வங்கிக்கு தானமாக ரத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே வெளிநாடு செல்வதற்காக மேலூர் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தபோதுதான் தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது மணிக்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 2016ல் இருந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து வருகிறேன். கடந்த நவம்பர் 30ம் தேதியன்றும் ரத்ததானம் ெசய்தேன். அப்போது எச்ஐவி தொற்று இருப்பது தெரிய  வந்திருக்கும். ஆனால், அரசு மருத்துவமனையில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர். கடந்த 6ம் தேதி வெளிநாடு செல்வதற்காக ரத்தப் பரிசோதனை செய்த போதுதான் எனக்கு எச்ஐவி தொற்று இருந்தது  தெரிய வந்தது. நான் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று விவரத்தை கூறி ஏற்கனவே நவம்பர் 30ம் தேதி கொடுத்த ரத்தத்தை யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் என்று தெரிவித்தேன். அவர்கள் உங்களது ரத்தம் ஒருவருக்கு  கொடுக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்கள். இதனால் அச்சமடைந்தேன்,’’ என்றார்.

டாக்டர்கள் அலட்சியத்தால்
எச்ஐவி நோயாளியானேன்: கர்ப்பிணி கண்ணீர் மனு
பாதிக்கப்பட்ட பெண் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ, டிஎஸ்பி ராஜராஜனிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவரை, கைத்தாங்கலாக கணவர் அழைத்து செல்ல, உறவினர்கள் சூழ  மனு தர தள்ளாட்டத்துடனே வந்தார். மனுவில் கூறியிருப்பதாவது :நான் கர்ப்பமான நாளில் இருந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தேன். டிச. 3ம் தேதி என்னை பரிசோதித்த டூட்டி டாக்டர், ‘ரத்தம் ஏற்ற வேண்டும்’ என்றார். எனது கணவரிடம், சிவகாசி அரசு  மருத்துவமனை ரத்த வங்கிக்கு சென்று ரத்தம் வாங்கி வருமாறு கூறினார். அன்றே ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், எனக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்கள், நர்ஸ்களிடம் தெரிவித்தபோது, ‘சரியாகி விடும்’ என்றார்கள்.  டிச. 5ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். வீட்டிற்கு சென்றதும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எனவே, 17ம் தேதி மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ரத்த மாதிரி எடுக்க சொல்லி டாக்டர்  பரிசோதித்தார். அப்போதே எனக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட விபரம் டாக்டருக்கு தெரிந்து விட்டது. ஆனால், என்னிடம் சொல்லாமல் டிச. 18ம் ேததி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு என் ரத்தத்தை  பரிசோதித்து எனக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட தகவலை தெரிவித்தனர்.

அரசு டாக்டரின் கவனக்குறைவே இதற்குக் காரணம். எனது இந்த நிலைக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகமும்தான் காரணம். என் உயிருக்கும், வயிற்றில் உள்ள 9 மாத குழந்தையின்  உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, டாக்டர்களின் கவனக்குறைவால்தான் நான் நிரந்தர எச்ஐவி ேநாயாளி ஆக்கப்பட்டுள்ளேன். இதனால் நான் உட்பட எனது குடும்பமே மிக மன உளைச்சல்  அடைந்துள்ளோம். எனக்கு இப்பாதிப்பு ஏற்பட காரணமான டூட்டி டாக்டர்கள், நர்ஸ்கள், சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில்  தெரிவித்துள்ளார்.

ரத்தத்தை பரிசோதனை செய்யாத சிவகாசி ஜிஹெச்
சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆய்வகத்தில், நேற்று காலை 11 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் மருத்துவர் சிந்தா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி உள்ளிட்ட  குழுவினர் சோதனை நடத்தினர். அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள ரத்த யூனிட்களின் மாதிரியை ஆய்வு செய்தனர். பின்னர் ரத்த வங்கி பொறுப்பாளர், மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை  நடத்தினர். அப்போது ரத்த வங்கியில் உள்ள ரத்த யூனிட்கள் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தாதது தெரியவந்தது.இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் மருத்துவர் சிந்தா கூறுகையில், ‘‘சிவகாசி ரத்த  வங்கியில் தானமாக பெறப்பட்ட ரத்த யூனிட்கள் 5 வகை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

ரத்த வங்கிகளில் மறுபரிசோதனை
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ரத்த  வங்கிகளில் இருப்பில் இருக்கும் ரத்தத்தை மறுபரிசோதனை செய்து, சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு  அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட இணை இயக்குனர் மனோகரன்  உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி கூறுகையில், ‘‘எச்ஐவி தொற்று ஏற்பட்ட கர்ப்பிணியின்  வயிற்றில்  இருக்கும் குழந்தைக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணை கூர்மையாக கவனித்து சிகிச்சை அளித்து வருகிறோம்,’’ என்றார்.

‘வழக்குபதிந்து நடவடிக்கை’
மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவில் உள்ள 8 மாத சிசுவுக்கு, எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சிகிச்சை வழங்கி, தாயையும், குழந்தையையும் காப்பாற்ற மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.டாக்டர் உட்பட3 பேர் மீது வழக்கு பாதித்த பெண் கொடுத்த புகாரின்பேரில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர், சிவகாசி ரத்த வங்கி ஊழியர் ஆகியோர் மீது சாத்தூர் டவுன் போலீசார் 2 பிரிவுகளில் (229 - தெரிந்தே நோய்  ஏற்படுத்துதல், 308 நிரந்தர காயம் ஏற்படுத்துதல்)  வழக்குபதிந்துள்ளனர்.

ரத்த தானம் பண்றீங்களா?5 பரிசோதனை அவசியம்
ரத்த வங்கி செயல்பாடு குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘பொதுவாக ரத்த வங்கிக்கு ரத்தம் கொடுக்க வருபவருக்கு 18 வயதிற்கு மேல், 65 வயதிற்குள் இருக்க வேண்டும். அவரது  முகவரி, போன் எண் பெறப்படும். ரத்த சோகை. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இளைப்பு நோய் பாதித்தவர்களிடம் ரத்தம் எடுக்க மாட்டோம். சிகிச்சையில் சுகமடைந்திருந்தால் எடுக்கலாம். ஒருவரிடமிருந்து 350 மில்லி முதல்  400 மில்லி வரை ரத்தம் எடுக்கப்படும்.சிறிய பாட்டிலில் சோதனைக்கென சிறிது ரத்தம் சேகரிக்கப்படும். இந்த ரத்தம் எச்ஐவி, மஞ்சள்காமாலை-பி, மஞ்சள்காமாலை-சி, மலேரியா, சிபிலிஸ் ஆகிய 5 வகையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் முடிவுகள்  வரும் வரை, எடுக்கப்பட்ட ரத்தம் தனியாக வைக்கப்படும்.

வங்கிக்கு அனுப்பப்பட மாட்டாது. இந்த சோதனை முடிவுக்குப்பிறகே, சுத்தமான ரத்தம் என்ற நிலையில் ரத்த வங்கிக்கு அனுப்பப்படும். பரிசோதனையில் எச்ஐவி ரத்தம்  எனத்தெரிந்தால், ரத்தம் வழங்கியவரை அழைத்து, சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவத்திற்கு பிறகு, சுகாதாரச்செயலர் ஒரு குழு அமைத்துள்ளார். வேலூர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் உள்ள  மருத்துவர்கள் இக்குழுவில் இடம்பெறுவர். இவர்கள் தரும் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fetus ,Investigation ,Health Secretary Secretary ,Madurai ,Pregnant , prevent ,fetus, HIV , Madurai, Pregnant , Secretary
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...