×

மயாங்க், புஜாரா அரை சதம் விளாசல் மெல்போர்னில் இந்தியா நிதான ஆட்டம்: 2 விக்கெட்டுக்கு 215 ரன் குவிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. அறிமுக தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 76 ரன் விளாசி சாதனை படைத்தார்.மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரி, மயாங்க் அகர்வால் களமிறங்கினர். ஒரு முனையில் விஹாரி மிகக் கவனமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட, அறிமுக வீரர் அகர்வால் மிகுந்த நம்பிக்கையுடன் பந்துகளை எதிர்கொண்டு ரன் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 40 ரன் சேர்த்தது.66 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி 8 ரன் எடுத்து பேட் கம்மின்ஸ் வேகத்தில் ஆரோன் பிஞ்ச் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த செதேஷ்வர் புஜாரா பொறுப்புடன் விளையாடி கம்பெனி கொடுக்க, அகர்வால் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகர்வால் 76 ரன் எடுத்து (161 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்ன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்கினார். புஜாரா - கோஹ்லி ஜோடி உறுதியுடன் விளையாட இந்திய ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 21வது அரை சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்துள்ளது.புஜாரா 68 ரன் (200 பந்து, 6 பவுண்டரி), கோஹ்லி 47 ரன்னுடன் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 19 ஓவரில் 6 மெய்டன் உட்பட 40 ரன் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில், இந்தியா இன்று மிகப் பெரிய ஸ்கோர் அடித்தால் ஆஸி. அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.


அறிமுக வீரராக அதிக ரன்
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் 295வது வீரராக அறிமுகமான மயாங்க் அகர்வால், தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலேயே 76 ரன் விளாசி திறமையை நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமான இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 1947 டிசம்பரில், சிட்னி டெஸ்டில் அறிமுகமான தத்து பத்கர் தனது முதல் இன்னிங்சில் 51 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை அகர்வால் நேற்று முறியடித்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மயாங்க் அகர்வால் கூறுகையில், ‘இந்திய அணிக்கான தொப்பியை பெற்ற தருணத்தை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது. அதிலும் எம்சிஜியில் அறிமுகமாவது ஸ்பெஷலானது. முதல் இன்னிங்சிலேயே 76 ரன் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய ஸ்கோர் அடித்திருக்க முடியும். நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். துரதிர்ஷ்டவசமாக அது கைகூடவில்லை’ என்றார்.  மெல்போர்ன் போட்டிக்கு உள்ளூர் வீரரான பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ரசிகர்கள், அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பந்துவீச வந்தபோது கேலி செய்து கூக்குரலிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayank ,Pujara ,India ,Melbourne , Mayank and Pujara,half century ,India in Melbourne, India scored 215 runs , second wicket
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...