×

புனலூர் அகல ரயில்பாதை திறந்தும் புண்ணியமில்லை: செங்கோட்டை பயணிகளின் தேவைகள் நிறைவேற்றப்படுமா?

நெல்லை: புனலூர் அகல ரயில்பாதை திறந்த நிலையிலும், செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ரயில்களும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் பயணிகள் திண்டாடுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்தபடியாக முக்கிய ரயில் நிலையமாக செங்கோட்டை ரயில் நிலையம் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக புனலூர் அகல ரயில்பாதையை காரணம் காட்டியே அங்கு எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை. இந்நிலையில் புனலூர் அகல ரயில்பாதை திறக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் அம்மார்க்கத்தில் போதிய ரயில் வசதிகள் இல்லை என்பது குறைபாடாக உள்ளது.

தாம்பரம்- கொல்லம், நெல்லை- பாலக்காடு பாலருவி ரயில் ஆகிய இரு விரைவு ரயில்கள் அப்பாதையில் இயக்கப்பட்டாலும், இவற்றில் ஒன்று மட்டுமே தினசரி ரயிலாகும். பாலருவி எக்ஸ்பிரஸ் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஏசி பெட்டிகள் இன்றி இயக்கப்படுவதால் பயணிகள் அதை விரைவு ரயிலாக கணக்கில் கொள்ளவே தயங்குகின்றனர். மேலும் பாலருவி எக்ஸ்பிரசிற்கு என தனிப்பெட்டிகள் இன்றி பயணிகள் ரயில்களின் பெட்டியே இயக்கப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.நெல்லையில் இருந்து கொல்லம் அல்லது புனலூர் வரை செல்ல இன்று வரை செங்கோட்டை மார்க்கத்தில் நேரடி பயணிகள் ரயில் வசதிகள் இல்லை. தென்காசி- புனலூர் இடையே மலையழகை ரசிக்கும் வகையில் ஊட்டி மலை ரயில் போன்று புதிய ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது. ஆனால் அதற்கான ஏற்பாடுகளும் இல்லை.

இதுகுறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், ‘‘தாம்பரம்- கொல்லம் இடையே இயக்கப்படும் வாரம் மும்முறை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் செல்கிறது. பயணிகள் சிரமங்களை தவிர்க்க இந்த ரயிலின் நேரத்தையும் மாற்ற வேண்டும். பாலருவி எக்ஸ்பிரசும் கூட நள்ளிரவு ரயிலாகவே காணப்படுகிறது. தற்போது நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் சிறப்பு ரயில் நிரந்தரம் செய்யப்பட்டு, தாம்பரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

நெல்லை மற்றும் தென்காசியில் இருந்து கொல்லத்திற்கு காலை, மாலை வேளைகளில் பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் அமைக்க நடவடிக்கையில்லை. செங்ேகாட்டையில் அல்லது பகவதிபுரத்தில் ரயில் பெட்டிகளுக்கான பிட்லைன் வசதிகளை செய்து கொடுக்கலாம். பயணிகள் வசதிக்காக செங்கோட்டை, தென்காசி ரயில் நிலையங்களில் முழு நீளத்திற்கும் மேற்கூரை அமைத்து தர வேண்டும். தெற்கு ரயில்வே கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள செங்கோட்டை- தாம்பரம் அந்தியோதயா ரயிலை விரைந்து இயக்கிட வேண்டும். இதுபோன்ற பல கோரிக்கைகளை மதுரை கோட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் அவை நிறைவேறும் என நம்புகிறோம்.’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punalur ,passengers ,Red Fort , Punalur, wide railway line, Sengottai, passenger, needs
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...