×

திருக்கனூர் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத பொது கழிப்பிடம்

திருக்கனூர் : திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால், இங்குள்ள மக்கள் ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் இயற்கை உபாதைகளை கழித்து வந்தனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியினர் பொதுக்கழிப்பிடம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து கூனிச்சம்பட்டு தாய் சேய் நல துணை நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் ராமதாஸ் எம்பியாக இருந்தபோது, அவரது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும் சில காரணங்களால் அக்கட்டிடம் இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. பல லட்சம் செலவில்
இக்கட்டிடம் கட்டப்பட்டும், திறப்பு விழா காணாததால் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த கழிப்பிட வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் இங்கு விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகில் உள்ள தாய் சேய் நல மையத்திற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் வந்து செல்வதால் அவர்களுக்கு விஷ ஜந்துக்களால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேலே இருந்த தண்ணீர் டேங்கும், கழிவறைகளும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் கழிப்பிட வளாகம் முற்றிலும் சேதமாக வாய்ப்புள்ளது.   

கழிப்பிட வளாகத்தை சீரமைத்து திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு பாழடைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : completion , thirukanur, public toliet, 1000 families, toilet
× RELATED அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா