×

3-வது டெஸ்ட் போட்டி: அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து மயங்க் அகர்வால் அசத்தல் ...முதல் நாள் முடிவில் இந்தியா 215/2

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 போட்டிகள் கொன்ற தொடர் 1-1 என்ற கனைக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், விஹாரி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக வெளிநாட்டு மண்ணில் நீண்டநேரம் தாக்குப்பிடித்த (18.5 ஓவர்) தொடக்க ஜோடி என்ற சாதனை படைத்தனர். அணியின் ஸ்கோர் 40 ரன்கள் ஆக உயர்ந்த போது 8 ரன்கள் எடுத்த நிலையில் ஹனுமா விஹாரி ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் 34 ரன்களுடனும், புஜாரா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பின் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். மயங்க் அகர்வால் தனது அறிமுக போட்டியிலேயே 95 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் புஜாரா வழக்கம் போல் பொறுப்புடன் நிதானமாக ஆடிவந்தார். 161 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த போது ஸ்டார்க் பந்தில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். புஜாரா 152 பந்தில் தனது அரைசதத்தை கடந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. புஜாரா 200 பந்துகளில் 68 ரன்களுடனும், விராட் கோலி 107 பந்துகளில் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test Match ,debut match ,Mayank Agarwal ,India , 3rd Test Match,Mayank Agarwal,half century,debut match,India,first day
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...