×

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ராட்சத தூண்கள் நிறுவும் பணி இன்று தொடக்கம்

* 6 மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ராட்சத தூண்கள் நிறுவும் பணிகள் இன்று (26ம்தேதி)  தொடங்குகிறது. அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து கும்பாபிஷேகம் நடத்த தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்திருவிழாவின் போது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் செய்வர்.

புகழ்பெற்ற இத்திருக்கோயிலை முற்றிலுமாக இடித்து புரனமைக்க முடிவு செய்து, கடந்த 2015ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால், திருப்பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதனிடையே, கோயில் வளாகத்தில் நிறுவ ராட்சத தூண்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனை பொருத்தும் பணிகள் இன்று தொடங்குகிறது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோட்டை மாரியம்மன் கோயில் சுமார் ₹2 கோடி மதிப்பில் புரனமைக்கப்படுகிறது. கோயிலின் கற்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் எடுத்துக்காட்டு மண்டபம் ஆகிய இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ராட்சத கல் தூண்கள் நிறுவப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இவை தயார் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 18 தூண்கள் வரவழைக்கப்பட்டு, இதனை நிறுவும் பணிகள் இன்று (26ம் தேதி) தொடங்குகிறது. ஒவ்வொரு தூண்களிலும் பழங்கால புராணங்களை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் இடம்பெறுகின்றன.

இதனை வடிவமைக்கும் பணிகளால், சற்று தாமதமாகிறது. திருக்கோயிலில் தற்போது வரை 60 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இந்த கல் தூண்கள் அனைத்தும் நிறுவப்பட்டால், 95 சதவீத பணிகள் முடிந்துவிடும். இப்பணிகளை அடுத்த 6 மாதத்திற்குள் முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pillars ,Salim Fort Mariamman Temple , Salem. mariyyamman Temple, Kumbamela,Giant pillars
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...