×

இன்று 14-வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு : கடற்கரைகளில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு இந்தியாவின் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் கலங்கடித்து சென்றது சுனாமி. 14 ஆண்டுகளுக்கு முன்பு 2004 டிசம்பர் 26- அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள். இன்று 14-வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, செருதூர், நாகூர் ஆகிய கடற்கரையில் அதிகாலையில் பொதுமக்கள் திரண்டனர். உயிர்நீத்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தனர். திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றியும்  மலர்தூவியும்  அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவுதினத்தை அனுசரிக்கும் வகையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.  வேளாங்கண்ணியில் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தனர்.

தேவனாம்பட்டினம் அரசு கலை கல்லூரி முன்பு திரண்ட பொதுமக்கள், அங்கிருந்து கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர். அங்கு கடலில் பாலை ஊற்றியும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். சில பெண்கள் கடற்கரையில் ஒன்று கூடி, சுனாமியில் இறந்தவர்களை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். சுனாமியின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுனாமி ஆழிப்பேரலை தமிழகத்தில் வந்து சென்று ஓரிரு நாள் கடந்த பின்னரே ‘சுனாமி’ என்றொரு பேரலை இருக்கின்ற தகவலும், இதற்கு சுனாமி என்று பெயரிடப்பட்டிருப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியவந்தது. எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளோ, பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகளோ அப்போது முன்னதாக மாவட்ட மக்களுக்காக நடத்தப்படவில்லை. அதன் பின்னர்தான் இனி சுனாமி வந்தால் அதனை முன்கூட்டியே எப்படி கண்டறிவது என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு அதுவும் அரைகுறையாகவே பணிகள் நடந்துள்ளது.

2004-க்கு பின் எப்போதாவது சுனாமி என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ல் பிப்ரவரி 19 அன்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shores , Tsunami, 2004, December 26, memorial day, tears of tears
× RELATED ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம்...