போலந்து நாட்டில் வேலை செய்த ஆற்காடு வாலிபர் கொலை: உடலை மீட்டு வர மனைவி மனு

வேலூர்: போலந்து நாட்டுக்கு வேலைக்கு சென்ற ஆற்காடு வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை மீட்டு வர கலெக்டர் ஆபீசில் மனைவி கண்ணீர் மனு அளித்தார். இதையடுத்து உடலை இந்தியா கொண்டு வர அந்நாட்டு தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாலாஜா தாலுகா ஆற்காடு அடுத்த சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(25). இவரது மனைவி வி.கலைச்செல்வி (20). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் கடந்த நவம்பர் 4ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஐரோப்பாவில் உள்ள போலந்து நாட்டின் வார்தா நகரில் தனியார் பழரச தொழிற்சாலைக்கு சூப்பர்வைசர் வேலைக்கு சென்றார். இந்நிலையில், அவர் அங்கு தங்கியிருந்த அறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை வெங்கடேசன் மனைவி கலைச்செல்வி தனது கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக வெங்கடேசனை போலந்துக்கு அனுப்பி வைத்த ஏஜென்டை தொடர்பு கொண்ட போதுதான் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து தனது கணவரது உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறும், தனது வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரியும் நேற்று காலை கலைச்செல்வி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் ராமன் உடனடியாக டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் போலந்து தூதரகம் மூலம் வெங்கடேசன் உடலை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல் போலந்து நாட்டின் தூதரகமும் இறந்தவர் குறித்த தகவல்களை மத்திய வெளியுறவுத்துறையிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே, 5 நாட்களில் வெங்கடேசனின் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: