×

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மண் கொட்டி ஏரியை நிரப்பியதால் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

சேலம்: சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஏரிக்குள் மண்ணை கொட்டி நிரப்பியதால் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் பேரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் மதுரையை சேர்ந்த ஒப்பந்ததாரர், கட்டுமான பணியை தொடங்கி, கடந்த 10 நாட்களுக்கு முன் தூண்கள் அமைக்க குழி தோண்டினர். அப்போது, ஏரிப்பகுதி என்பதால், தண்ணீர் ஊற்று எடுத்து பெருகியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வந்து, ஏரிப்பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

மேலும், ஏற்கனவே அந்த பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு போதிய அடிப்படை வசதி ஏதும் இல்லை எனக்குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த பகுதியை வருவாய்த்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர். இருப்பினும் கட்டுமான பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மற்றொரு பிளாக் கட்டுவதற்காக, தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் ஏரிக்குள் அடுக்குமாடி  கட்டுமானத்திற்காக மண்ணை கொட்டி நிரப்பும் பணியில் இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மண்ணை ெகாண்டு வந்து ஏரி தண்ணீரில் கொட்டி, நிரப்பினர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று காலை ஏரிக்குள் மண் கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்தனர். அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நீர்நிலையை நிரப்பி கட்டிடம் கட்டக்கூடாது என வாக்குவாதம் செய்தனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும், ஒப்பந்ததாரர் தரப்பிலும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் எதிர்ப்பை அடுத்து மண் கொட்ட வந்த லாரிகள் திரும்பிச்சென்றன. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஏரிக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது போல், ஏரிக்குள் அடுக்குமாடி கட்டிடம் கட்டினால் இடிந்து விழுந்துவிடும். ஆகவே இப்பணியை உடனே நிறுத்த  வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : darna fight ,flat ,lake ,Salem , Salem, Apartment, Public, Darna Struggle
× RELATED புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு...