×

சூடுபிடிக்கிறது குட்கா முறைகேடு வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை: சிபிஐ அதிகாரிகள் முடிவு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர்களை தொடர்ந்து வரும் ஜனவரி முதல் வாரத்தில் காவல் துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் தடையின்றி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவரும் ஒவ்வொரு மாதமும் பல லட்ச ரூபாய் லஞ்சம்  பெற்றதற்கான டைரி ஆதாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து குட்கா வழக்கு பல்வேறு சட்டப் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

 இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகிய 36 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் குட்கா வழக்கிற்கான முக்கிய ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.
 அந்த ஆதாரங்களின் படி குட்கா வியாபாரிகளான  மாதவராவ், சீனிவாசராவ், குப்தா மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பாண்டியன், செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் சரவணனிடம் கடந்த 7ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.

அதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா ஆகியோர் கடந்த 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குட்கா தடையின்றி விற்பனை செய்ய கடந்த 2013 ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை காவல் துறையில் உயர் பதவியில் இருந்த 30 பேர் குட்கா வியாபாரியிடம் ஓவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக கூறியதாக கூறப்படுகிறது. அவர்களின் பட்டியலும் விசாரணையின் போது இருவரும் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிபிஐ தனது மூன்றாம் கட்ட விசாரணையை வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாம் கட்டமாக குட்கா வழக்கின் போது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய காவல் துறை உயர் அதிகாரிகளின் பட்டியலின் படி தான் விசாரணை தொடங்க உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாளில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gudka ,CBI , Gudka malpractice case, police, CPI
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...