×

208 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடிக்கு ரயில் பாதை: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: ராமேஸ்வரம், தனுஷ்கோடியை இணைக்கும் வகையில் ரூ.208 கோடியில் ரயில்  பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்து யாத்ரீகர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ராமேஸ்வரத்திற்கு வட இந்தியா உள்பட நாட்டின்  பல்வேறு பகுதியில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான இந்துக்கள் புனித பயணமாக  வந்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் கடந்த  1964ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் சூறாவளி காரணமாக  இதையொட்டிய தனுஷ்கோடி முற்றிலும் அழிந்தது. அங்கிருந்த ரயில் நிலையமும்  சேதமடைந்தது. இதனால் பிரபலமான சுற்றுலாத்தலமான தனுஷ்கோடியில் ஆள் நடமாட்டம்  இல்லாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழக  மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையே அகல ரயில்பாதை  அமைக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 17 கிமீ  தூரத்துக்கு ரூ.208 கோடி செலவில் இந்த திட்டத்தை தற்போதைய நிதியாண்டிலேயே  தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் வரும்  யாத்ரீகர்கள் தனுஷ்கோடி கடலில் புனிதநீராட முடியும். இதன் மூலம் அவர்களது  யாத்திரை முழுமையடையும். இந்த ரயில் பாதை அமைப்பதன் மூலம் அதிகப்படியான  பயணிகள்  ராமேஸ்வரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையே ராமேஸ்வரத்திற்கு அருகேயுள்ள 104 ஆண்டு பழமையான பாம்பன்  பாலத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  

பழமையான பாம்பன் பாலத்திற்கு அருகே புதிய பாலம் ரூ.249 கோடி செலவில்  அமைக்கப்படுகிறது. இந்த புதிய பாலம் அமைப்பதன் மூலம் ராட்சத அலைகள்  எழும்போது கூட இந்த பாலம் செங்குத்தாக தூக்கப்பட்டு கப்பலுக்கு தானாகவே  வழிவிட முடியும். தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே அமையும் புதிய ரயில்பாதையால்  இலங்கைக்கு கடல்வழிபாதை மீண்டும் புதுப்பிக்கப்படும் என நம்பப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram-Dhanushkodi , Rameswaram, Dhanushkodi, Railway, Central Government
× RELATED 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை...