×

மத்தூர் மஜத பிரமுகர் கொலை வழக்கு குற்றவாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்: கர்நாடக முதல்வர் உத்தரவால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை துப்பாக்கியால் சுடும்படி முதல்வர் குமாரசாமி பேசியிருப்பது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பஞ்சாயத்து முன்னாள் தலைவர் லலிதா. இவரது கணவர் தோப்பனஹள்ளி பிரகாஷ் (48). மத்தூர் மஜத தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பங்களா சர்க்கிள் பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இளநீர் மார்க்கெட்டிற்கு சென்று பணம் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.

தனியாக வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. மத்தூர் சரகத்திற்குட்பட்ட டி.பி சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் கும்பல் வாகனத்தை வழிமறித்துள்ளனர். பின்னர் கையில் இருந்த ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினர். சுமார் 15 முதல் 20 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் காரினுள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலையையொட்டி மஜத பிரமுகர்கள், மைசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் முடியாமல் போனது. இதையடுத்து அமைச்சர்கள் சி.எஸ் புட்டராஜூ, டி.சி.தம்மண்ணா ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொண்டர்கள் கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று போர்கொடி உயர்த்தினர். இதையடுத்து அமைச்சர்கள் போலீசார் அழைத்து கொலையாளிகளை கைது செய்து துரித நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்ட பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் நேற்று மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே விஜயபுராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு சென்ற முதல்வர் குமாரசாமிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய அவர் செல்போன் வாயிலாக சக மீடியாக்கள் முன்னிலையில், போலீசாரை அழைத்து பேசினார். அதில், மஜத பிரமுகர் பிரகாஷ் நல்லவர். ஒரு நல்லவருக்கு இதுபோன்று நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு கொலை செய்யும்படி உத்தரவிட்டார். இந்த பேச்சு அனைத்து மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் சிலர் முதல்வர் குமாரசாமியின் இந்த பேச்சை விமர்சனம் செய்தனர்.

இதை கேள்விப்பட்ட குமாரசாமி பின்னர் மீண்டும் பேட்டியளித்தார். அதில் முதல்வராக நான் அந்த உத்தரவை போடவில்லை. சாதாரண மனிதராக ஆத்திரத்தில் அதை போன்று கூறிவிட்டேன். ஏனென்றால் இதற்கு முன்னர் இதேபோன்று மஜத பிரமுகர்கள் 2 பேர் ஒரே நாளில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே நபர்கள் தான் ஜாமீனில் வெளியே வந்து இந்த கொலையை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற முறையில் பேசிவிட்டேன் என்று கூறினார். கொலை தொடர்பாக பிரகாஷின் நண்பரான அபிலாஷ் என்பவர் நேற்று மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கொலையாளிகள் என்று கருதப்படுவதாக பிரசன்னா, சாமி, முத்தேஷ், சிவராஜ், யோகேஷ், ஹேமந்த் உள்பட 7 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்துள்ளார். அந்த புகாரை வாங்கிய மத்தூர் போலீசார் 7 பேர் மீது   வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mathur ,Karnataka ,Chief Minister , Mathur Majatha drama, murder case, Karnataka chief minister
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...