சீனா பாலுக்கு தடை நீடிப்பு...சாக்லெட், மிட்டாய், இனிப்பு வகைக்கும் பொருந்தும் : வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் உத்தரவு

புதுடெல்லி: சீனாவில் இருந்து கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது, சாக்லெட், மிட்டாய் மற்றும் இனிப்பு வகைகளுக்கும் பொருந்தும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2010 - 2014ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பால் உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 4.29 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 2014 - 18ம் ஆண்டுகளுக்கிடையில் 6.5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு தனி நபர் பால் நுகர்வு விகிதம் 307 கிராமிலிருந்து 376 கிராமாகவும், பால் பதப்படுத்தும் அளவு 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதனை பதப்படுத்தும் அளவை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், உள்நாட்டில் பால் உற்பத்தி 28 சதவீதம் அதிகரித்து 17.63 கோடி டன்னை  எட்டியுள்ளது. இதன் உற்பத்தி 2013 - 14ம் ஆண்டில் 13.77 கோடி டன்னாக இருந்தது. மொத்த உற்பத்தியில் மாநிலம் வாரியாக கணக்கிட்டால் உத்தரபிரதேசம் முதலிடம், அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான், குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்கள் உள்ளன. உலகளவில் பால் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 150 மில்லியன் டன் பால் நுகர்வு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்துதான் விற்பனை செய்கின்றனர்.  
குறிப்பாக, பாலில் சலவைத்தூள், நெய் மற்றும் வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு, பாலில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லெட், மிட்டாய், இனிப்பு வகை போன்றவற்றில் பிளாஸ்டிக் மற்றும் உரத்துக்கு பயன்படுத்தக் கூடிய ‘மெலமைன்’ கெமிக்கல் பயன்படுத்தி சந்தைப்படுத்தப்படுகிறது. அதுவும், குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லெட், வெளிநாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதியில்லை என்றாலும் கூட, அவை கள்ளமார்க்கெட்டில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
சீன பால் மற்றும் பால் பொருட்களை கடந்த 2008ம் ஆண்டு முதல் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் மூலம் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய - சீன வர்த்தக ஒப்பந்தத்தின்படி, அவ்வப்போது இந்த தடை உத்தரவுகள் நீடிக்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் முதல் தடை விதிப்புக்கான காலக்கெடு முடிந்தது. அதையடுத்து, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘சீனாவில் இருந்து பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லெட், மிட்டாய், இனிப்பு வகைகள் இறக்குமதி செய்ய தடை செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவு அடுத்தாண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடைக்கான காரணமாக, பால் மற்றும் பால் பொருட்களில் பிளாஸ்டிக் மற்றும் உரம் தயாரிக்கப் பயன்படும் ‘மெலமைன்’ ரசாயனம் பயன்படுத்தியுள்ளதால், இத்தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பால் மற்றும் பால்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி இல்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,Foreign Trade General Directorate , China milk, banned, chocolate, candy
× RELATED வ.உ.சி பூங்காவிற்கு செல்ல தடை