×

தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி துப்புரவு பணியை தனியாரிடம் ஒப்படைக்க டெண்டர்

* சென்னை மாநகராட்சி நிர்வாகம் தடாலடி
* அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
* நீதிமன்றத்தை நாட தொழிற்சங்கம் முடிவு

சென்னை: தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பது தொடர்பான  டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் ரிப்பன் மாளிகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய 8 மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற  பேச்சுவார்த்தையில்  துப்புரவு பணிகளை தனியாரிடம் கொடுப்பதை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட 8 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், அவற்றை கண்காணிக்கவும் ஒரு அமைப்பை தேர்தெடுக்க தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் கடந்த நவம்பர் மாதம் 26ம்  தேதி டெண்டர்  வெளியிடப்பட்டது. ஒருபக்கம் டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட சென்னை மாநகராட்சி மறுபுறம் வேறு நிறுவனம் மூலம் பணிகளை தொடர்ந்து வருவதை பார்த்த சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை கண்டித்து கடந்த  நவம்பர் 23ம் தேதி ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 36 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் துணை ஆணையர் (சுகாதாரம்), திடக் கழிவு மேலாண்மை துறையின் தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நவ. 24ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வியில் முடிந்ததால் துப்புரவு பணியாளர்கள் கடந்த மாதம் 27ம் தேதி ேவலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து டெண்டர் திறப்பை ஒத்திவைப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் இந்த டெண்டரானது நேற்று மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்க ரிப்பன் மாளிகை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டிருந்த அம்மா மாளிகையின் 4வது மாடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒரேஒரு நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினரிடம் கேட்டபோது, மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : individual , Workers, cleaning work, tender
× RELATED 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்