×

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார் டோனி: ஒருநாள் போட்டியில் பன்ட் நீக்கம்

மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணியில் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.டோனி மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் நடைபெற்ற டி20 தொடர்களுக்கு நீக்கப்பட்டிருந்த அனுபவ விக்கெட் கீப்பர் டோனி, நியூசிலாந்து டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், இளம் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெறவில்லை. நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியில் பன்ட் இடம் பெற்றிருந்தாலும், அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார். விக்கெட் கீப்பர் பொறுப்பை டோனி மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தயாராகும் வகையில் டோனிக்கு அதிக வாய்ப்பு அளிக்க தேர்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸி. டெஸ்ட் தொடர் முடிந்ததும் நாடு திரும்பும் பன்ட், இங்கிலாந்து ஏ அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஒருநாள், டி20 தொடர்களுக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார்.


ஒருநாள் போட்டிக்கான அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, கலீல் அகமது, முகமது ஷமி.

டி20 அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல்,  ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ்,  எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா,  கலீல் அகமது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tony ,T20 squad ,New Zealand , New Zealand, Indian, ms dhoni
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்