×

இப்போ இருக்கும் பார்மில் இரட்டை சதம் விளாசுவேன்...: அஜிங்க்யா ரகானே உற்சாகம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள மூன்றாவது டெஸ்டில் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க முடியும் என இந்திய அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். துணை கேப்டன் ரகானே 2 டெஸ்டில் 2 அரை சதம் உட்பட 164 ரன் (13, 70, 51, 30) எடுத்துள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக சதம் அடித்த அவர் அதன் பிறகு மூன்று இலக்க ஸ்கோரை எட்ட முடியாமல் தவித்து வருகிறார். மூன்றாவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில், ரகானே இது குறித்து கூறியதாவது: தற்போது நான் நல்ல பார்மில் இருக்கிறேன். அடிலெய்டு மற்றும் பெர்த் டெஸ்டில் எனக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. பந்துகளை துல்லியமாக கணித்ததுடன், திறம்பட சமாளித்து களத்தில் நீண்ட நேரம் நிற்க முடிந்தது. இரண்டு இன்னிங்சில் அரை சதம் அடித்தும், அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறிவிட்டேன். எனினும், மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி வருவதால் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அல்லது இரட்டை சதம் கூட அடிக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

அதே சமயம் சதம் அடிப்பது பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை தவிர்ப்பது மிக முக்கியமானது. இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். சூழ்நிலைக்கேற்ப விளையாடுவது அணியின் நலனுக்கும் நல்லது. சொந்த சாதனை மைல்கற்கள் தானாகவே வந்து சேரும். மீண்டும் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதை அனைவரும் உணர்ந்துள்ளோம். தொடரில் 1-1 என சமநிலை வகிப்பதும் நம்பிக்கை தருகிறது.

பெர்த் டெஸ்டில் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம். அதை பற்றியே நினைக்காமல், முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாட முயற்சிப்போம். தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தே எங்கள் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். பேட்ஸ்மேன்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும். இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parade ,Ajinkya Rakana , Ajinky Rahane, Australian team
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு