ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு: வேதாந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி:    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக  உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் கிளை கடந்த 21ம் தேதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில்,”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த பாத்திமாவின் மனுவுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா எனவும் தமிழக அரசு பதில் மனுவில் தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் 21ம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. அதுவரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   உயர் நீதிமன்ற மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் ரோகினி மூசா நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,”ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர விசாரித்த பின்னர் தான் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் வரும் 21ம் தேதி வரை ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Sterlite ,Vedanta , Sterlite plant ,High Court, order
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த...