×

பிரதமர் மோடி பேச்சு சிலருக்கு அதிகாரம் ஆக்சிஜன் போன்றது: காங்கிரசுக்கு மறைமுக கண்டனம்

புதுடெல்லி: ‘‘அதிகாரம் என்பது சிலருக்கு ஆக்சிஜன் போன்றது. அது இல்லையென்றால் சிலரால் வாழ முடியாது’’ என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இன்று அவரது 94வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு மறைந்த வாஜ்பாய் நினைவாக அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த நாணய வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, வாஜ்பாய் உருவம் பொறிக்கப்பட்ட 100  ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய அரசியல் களத்தில், சிலர் இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி இன்றி இருக்கவேண்டும் என்றால் அவர்கள் அமைதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். வாஜ்பாய் தனது ஒவ்வொரு விநாடியையும் மக்கள்  நலனுக்காக செலவழித்தார். சிலருக்கு ஆட்சி, அதிகாரம் என்பது ஆக்சிஜன்போன்றது. அது இல்லாமல் அவர்களால் வாழ முடியாது.

ஆனால் வாஜ்பாய் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை எதிர்க்கட்சி வரிசையிலேயே கழித்தார். ஆனால் அவர் நாட்டின்  நலனுக்கான பிரச்னைகளுக்காக அவர் குரல் கொடுத்தார். கட்சியின் சித்தாந்தத்தில் ஒருபோதும் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. ஜனநாயகம் உச்சத்தில் இருக்கவேண்டும் என வாஜ்பாய் விரும்பினார். அவர் ஜனசங்கத்தை உருவாக்கினார். ஆனால் நமது ஜனநாயகத்தை   காப்பதற்கான நேரம் வந்தபோது அவர் மற்றும் மற்றவர்கள் ஜனதா கட்சிக்கு  சென்றனர். அதேபோல் அதிகாரத்தை தொடர்வது அல்லது கொள்கையில் சமரசம் செய்வது என்பதற்கு இடையே எதை தேர்வு செய்வது என்ற சூழல்  வந்தபோது அவர்  அங்கிருந்து வெளியேறி பாஜ கட்சியை உருவாக்கினார்.

ஒவ்வொரு செங்கல்லாக கட்டி அவர் எழுப்பிய கட்சி இன்று உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக  உருவாகியுள்ளது. வாஜ்பாய் தாமரைக்கான விதைகளை நாட்டில் விதைத்தார். அவர் பேசியபோது தேசமே பேசியது. அவர் பேசியபோது தேசமே கவனித்தது. வாஜ்பாயின் குரல் பாஜவின் குரல் மட்டுமல்ல. இது சாதாரண மனிதனுடைய ஆசையின் வெளிப்பாடு ஆகும். அவர் இல்லை என்பதை ஏற்க மனது மறுக்கிறது. என்ெறன்றும் அவரை நினைவு கூர்வோம் என்றார். இந்த விழாவில் பாஜ மூத்த தலைவர் அத்வானி, மக்களவை  சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒடிஷாவில் பூதாகர ஊழல் பேய்
ஒடிசாவின் பல்வேறு துறைகளிலும் ஊழல் பேய் பூதாகரமாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில், குர்தா நகரில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, ₹1660 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள  புவனேஷ்வர் புதிய ஐஐடி வளாகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ₹14,523 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஒடிசாவில் 1817ம் ஆண்டு நடந்த பைக்கா கிளர்ச்சியின் நினைவாக தபால்தலை, நாணயத்தை  வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒடிசாவின் பல்வேறு துறைகளிலும் ஊழல் பேய் பூதாகரமாக உள்ளது.  ஊழல் பேய்க்கு வித்திட்டது யார்? சிட் பண்ட், கமிஷன் கலாசாரம் போன்றவற்றால் ஊழல் பேய் வளர்ந்துள்ளது. ஒடிசாவின் வளர்ச்சி என்ற உண்மையை மறைக்க முடியாது. ஒடிசா அரசு மத்திய அரசின் மெகா சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,speech ,Congress , PM Modi,power oxygen,Congress
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...