ஸ்டெர்லைட் விவகாரம்-வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அரசாணை  பிறப்பிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் தலைமையில் ஆலைக்கு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது.  

இந்த நிலையில் தமிழக அரசின் மேற்கண்ட முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. ஆலை பகுதியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட மேகாலயா உயர்  நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அதுகுறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த 7ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏகே.கோயல் அமர்வில் கடந்த 10ம் தேதி  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில், “ நிலத்தடி நீர், காற்று மாசு, குடிநீர், மக்கள் நலன் பாதிப்பு ஆகிய  எதையும் அந்த குழு கவனத்தில்  கொள்ளாமல் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அறிவியல் பூர்வமான எதுவும் கிடையாது என உறுதியாக கூற முடியும். அதனால் ஆலையை மீண்டும் திறக்க தீர்ப்பாயம் கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது  என வாதிட்டார். வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அமர்வு அடுத்த ஒரு வாரத்திற்குள்  தீர்ப்பு வெளியிடப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் ஆலையை மூட தமிழக அரசு கொடுத்த விளக்கங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. இதனால் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையையும் ரத்து. அதனால் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த மூன்றுவாரங்களுக்குள் மீண்டும் திறக்கலாம் என  உத்தரவிட்டது. இருப்பினும் இதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜன., 21 வரை தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் ஆலையை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,Vedanta Company ,Supreme Court , Sterlite affair, Vedanta Institute, Supreme Court, Appeal
× RELATED மக்கள்தொகை பதிவேட்டுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு