×

துறையூர் அருகே ஐயாற்றின் கரையை தோண்டி நூதனமுறையில் மணல் திருட்டு

துறையூர்: துறையூர் அருகே ஐயாற்றின் கரையை இயந்திரம் மூலம் பலஅடி ஆழத்திற்கு தோண்டி நூதனமுறையில் மணல்திருட்டு நடப்பதால் அருகில் உள்ள  விளை நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ளது கண்ணனூர். இந்த ஊர் வழியாக கொல்லிமலையில்  உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் ஐயாறு செல்கிறது.துறையூர் பகுதியில் பல ஏரிகளுக்கும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக இருப்பது இந்த ஐயாறுதான்.  பலஆயிரம் ஏக்கர்கள் பாசனவசதி பெறுகிறது. சமீபகாலமாக ஐயாற்றில் மணல்திருட்டு அதிகரித்து வருகிறது. பலமுறை அதிகாரிகள் தடுத்தும்  தொடர்மணல்திருட்டு நடைபெறுகிறது. ஆற்றில் இருந்த மணல்வளம் கொள்ளையடிக்கப்பட்டு மணல் வறட்சி ஏற்பட்டவுடன் மணல் திருடர்களின் கவனம்  ஆற்றின்கரை மீது திரும்பியுள்ளது.

கரையை சுமார் 10அடிவரை தோண்டி மேலே இருக்கும் களிமண்ணை அகற்றிவிட்டு அடியில் பலஅடுக்குகளாகஉள்ள மணல்திட்டை பொக்லைன் இயந்திரம்  மூலம் தோண்டியெடுத்து அருகில்சேமித்துவைக்கும் மணல்திருடர்கள் இரவுநேரத்தில் டிராக்டர்களில் அள்ளிக்கொண்டு செல்கின்றனர். இதற்காக எஸ்கார்டுகளை  (பாதுகாவலர்கள்) மணல் திருடர்கள் நியமித்துள்ளனர். குறிப்பாக துறையூர் காவல்நிலையம், பிரிவுரோடு கண்ணனூர் ஆற்றின் அருகில் என தங்கள் ஆட்களை  நியமித்திருப்பதுடன் மோட்டார் சைக்கிளில் பறக்கும்படையும் வைத்துள்ளனர். அதிகாரிகள் அல்லது புதிய நபர்கள் வந்தால் செல்போன்மூலம் மணல்  திருடுபவர்களுக்கு தகவல் சென்றுவிடும். இதற்காகவே நம்பர்பிளேட் இல்லாத டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர்.

அதிகாரிகள் வண்டியை பிடித்துவிட்டால் ரூ.30 ஆயிரம்வரை அபராதம் செலுத்திவிட்டு உடனடியாக வாகனத்தை மீட்டு விடுகின்றனர். காரணம் ஒரு யூனிட்   ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை தூரத்தை பொறுத்து விற்பனை ஆவதுதான். ரூ.30ஆயிரம் அபராதத்தை ஒரேநாளில் 10 நடைமணல் திருட்டுமூலம்  1லட்சம்சம் பாதித்து விடுகிறார்கள். இப்படி மணல் திருடுவதற்காக ஆற்றின்கரை தற்போது 30 அடிவரை தோண்டப்பட்டு அடியில் உள்ள மணல்  எடுக்கப்பட்டுள்ளது. மழைகாலத்தில் தண்ணீர் வந்தால் கரையின் பள்ளங்கள் புதிய மண்ணால் மூடப்படும்போது அருகில்உள்ள விளைநிலங்களில் மண்அரிப்பு  ஏற்பட்டு வயல்கள் பள்ளமாகிவிடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

குறிப்பாக கண்ணனூர் மற்றும் சுற்றுப்புறமுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் திருடுவதற்காகவே ஒரு குழு உள்ளதாக கூறப்படுகிறது.நேற்றுமுன்தினம்  ஆற்றை தோண்டி சுமார் 20 யூனிட் மணல்வரை திருட்டு நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்த துறையூர் தாசில்தார் உத்தரவின்படி துணை வட்டாட்சியர்,  வருவாய்துறை அதிகாரிகள் மேலும் கடத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணலில் பொக்லைன் இயந்திரம் மூலம் களிமண்ணை கலந்து  மீண்டும் ஆற்றின் பள்ளத்தினுள் தள்ளி குழியை மூடியதுடன் டிராக்டர் வரும் வழியையும் பள்ளம்தோண்டி வண்டிகள் செல்லமுடியாதபடி செய்தனர்.  வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் மணல்திருட்டை தடுக்க முடியாது. மணல் திருட்டில் ஈடுபடும் வாகனத்தை நிரந்தரமாக பறிமுதல் செய்தால்  மட்டுமே மணல் கொள்ளையை தடுக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sand Thripper ,Duraiyur ,river , Thuraiyur, sand, theft
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை