×

திருத்துறைப்பூண்டி, இலுப்பூர் அருகே நிவாரணப்பொருட்கள் கோரி சாலை மறியல்: 3 இடத்தில் நடந்தது

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, இலுப்பூர் அருகே மின்சாரம், நிவாரண பொருள் வழங்கக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமனி கிராமத்தில் கஜா புயல் தாக்கி 37 நாட்களாகியும் சில இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெருமாள் கோவில் தெரு, கைலாசநாதர் கோவில் தெரு  போன்ற 4 தெருக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மின்கம்பங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், மின்சாரம் வழங்கப்படவில்லை. மேலும், குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு  வந்தனர்.இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வலியுறுத்தி பாமனி அத்திமடை கடைத்தெருவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து மின்வாரிய  அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி ஊராட்சியில் அரசு சார்பில் 27 நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. இதில், புயலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பொருட்கள்  கிடைக்கவில்லை. இதனை கண்டித்து, விளக்குடி கடைத்தெருவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள தளிஞ்சி கிராமத்தில் 27 நிவாரண பொருட்கள் நேற்று காலை வழங்க ஏற்பாடு நடைபெற்று கொண்டிருந்தது. இதில் கணக்கெடுப்பில் குளறுபடிகள் உள்ளதால், சரியாக  கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனகோரி புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து இலுப்பூர் போலீசார் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சமாதானப்படுத்தினர்.

விஏஓக்கள் கடத்தினார்களா?
திருவாரூர் அருகே குளிக்கரை, தேவர்கண்டநல்லூர், பெருந்தரக்குடி, ஆணைவடபாதி ஆகிய 4 ஊராட்சிகளுக்கான நிவாரண பொருட்கள், குளிக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று  முன்தினம் இரவு 10 மணியளவில் குளிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய 2 ஊர்களுக்கு உரிய வி.ஏ.ஓக்கள், திருமண மண்டபத்தில் இருந்து மினிவேனில் நிவாரண பொருட்களை ஏற்றியதாக கூறப்படுகிறது.இதனைகண்ட பொதுமக்கள் நிவாரண பொருட்கள் கடத்தப்படுவதாக கூறி அந்த மினிவேனை மடக்கி பிடித்து கொரடாச்சேரி போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், இரவு நேரத்தில் நிவாரண பொருட்களை கடத்திய வி.ஏ.ஓக்களை  கண்டித்து மேப்பலம் என்ற இடத்தில் நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, தாசில்தார் குணசீலி மற்றும் கொரடாச்சேரி போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணப்  பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ilupur , Tiruttavapondi,Ilupur Road stalling
× RELATED இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல்