×

தமிழகத்தில் மோடி தந்திரம் பலிக்காது: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: “தேர்தல் பிரசாரம் தொடங்க வரும் பிரதமர் மோடியின் தந்திரம் தமிழகத்தில் பலிக்காது” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கக்கன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவராஜ சேகர் மற்றும் பி.வி.தமிழ்செல்வன், இமயாகக்கன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பாஜவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஒரு இடம் கூட கிடைக்காத தமிழகத்தில் இருந்து மோடி பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை. பாதிப்புக்கு ஏற்ப நிவாரண உதவி வழங்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு வருகிறார். இது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற மோடி செய்யும் தந்திரம் . ஆனால் அவரது தந்திரம் பலிக்கப்போவதில்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதற்கு ஒரு உதாரணம். பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் என்று திமுக முன் மொழிந்ததை எந்த கட்சியும் எதிர்க்கவில்லை. தக்க தருணத்தில் எல்லா கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஜி.எஸ்.டி வரி 100 பொருட்களுக்கு குறைக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறினார். ஆனால் 23 பொருட்களுக்கு மட்டுமே குறைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதுவும் தேர்தலுக்கான ஏமாற்று வேலை தான். தமிழகத்தில் கொள்ளை போன சிலைகளை மீட்பதற்காக கோர்ட் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சட்டத்துக்கு புறம்பாக புகார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. அந்த அதிகாரி வேண்டாம், அவர் சரியில்லை என்று கருதினால் அதுபற்றி அவர் நீதிமன்றத்தில் தான் முறையிட்டு இருக்க வேண்டும். அமைச்சர் இவ்வாறு கூறியதன் மூலம் அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் என்றே தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா பயணம்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் உள்ள மகளை பார்க்க அவர் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் சுமார் 2 வாரம் காலம் தங்க திட்டமிட்டுள்ளார். அதாவது அவர் ஜனவரி 9ம் தேதி வாக்கில் சென்னை திரும்பலாம் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Tamil Nadu ,interview ,TNN , Narendra Modi's ,trick, Tamil Nadu
× RELATED இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!