×

பீகாரில் தலா 17 மக்களவை தொகுதிகளில் போட்டி பாஜ-ஐஜத தொகுதி உடன்பாடு': லோக் ஜனசக்திக்கு 6 இடம் ஒதுக்கீடு

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே மக்களவை தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன.மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி உடன்பாடுகளில் பாஜ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை பங்கீடு செய்வதில் பாஜ.வுக்கும். அதன் கூட்டணி   கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் சமதா கட்சி கடந்த வாரம் வெளியேறியது. சமீபத்தில், இந்த கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது. இதனிடையே, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், பஸ்வானும் கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன் பஸ்வான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமரசம் ஏற்பட்டது.

இந்நிலையில், தொகுதி உடன்பாடு குறித்து ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வானுடன் பாஜ தலைவர் அமித்ஷா டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, பீகாரில் பாஜ.வும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. மீதமுள்ள 6 தொகுதிகள் லோக் ஜனசக்திக்கு வழங்கப்பட்டு உள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வானுடன் கூட்டாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,  அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  இதன் மூலம், பீகாரில் பாஜ கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.இது தவிர, லோக் ஜனசக்திக்கு மாநிலங்களவையிலும் ஒரு இடம் வழங்க பாஜ முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Competition ,Bajaj ,constituencies ,Lok Sabha ,Lok Janashakti 6 ,Bihar , Bihar , Lok Sabha ,agreement ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி