×

முன்னாள் துணைவேந்தர் அறவாணன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சென்னை: முன்னாள் துணைவேந்தரும், மூத்த தமிழறிஞருமான க.ப. அறவாணன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி கிராமத்தில் 1941ம் ஆண்டு பிறந்தவர் க.ப.அறவாணன். பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். மொழியியல், சமூக அறிவியல், இலக்கணம், வரலாறு, கல்வியியல் உள்ளிட்ட துறைகளில் 56 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் தமிழ் மக்கள் வரலாறு, தமிழரின் தாயகம், கவிதை கிழக்கும், மேற்கும் ஆகியவை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ேநற்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில், திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ( திமுக தலைவர்): க.ப.அறவாணன் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். தமிழின் தொன்மை குறித்த ஆய்வு நோக்கும் - தமிழ் வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நவீனத் தமிழுக்கு செய்துள்ள தொண்டு அளப்பரியது.திராவிட இயக்கத்தின் மீது பற்றும், தலைவர் கலைஞரிடம் தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டிருந்தவர். நமது இனத்தின் வரலாற்றை அவசியம் படிப்பதுடன், இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாமும் வரலாறு படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன்படி வாழ்ந்தவர். அவரின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்களுக்கும் திமுக சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழறிஞர் அறவாணன் எளிய குடும்பத்திலிருந்து வந்து எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர். அவரின் மறைவு தமிழுக்கும், தமிழாராய்ச்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். திருநாவுக்கரசர் ( காங்கிரஸ் தலைவர்): க.ப.அறவாணன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமும், துயரமும் அடைகிறேன். இவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழிசை (பாஜ மாநில தலைவர்): தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். திருமாவளவன் ( விடுதலை சிறுத்தைகள்): தமிழறிஞர் க.ப.அறவாணன் இயற்கை எய்தியது பெரும் கவலை அளிக்கிறது. அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுகத்துக்கு பேரிழப்பாகும். தமிழக அரசு அவருடைய நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தமிழ் அரங்குகளில் தம் கருத்துகளை வலியுறுத்திக்கொண்டே வாழ்ந்தவர். என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், தமிழ் ஆர்வலர்களோடு இணைந்து, இந்தத் துயரத்தில் பங்கேற்கின்றேன்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): க.ப.அறவாணன் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். இவரது படைப்புகள் தமிழக அரசின் விருதுகளை 3 முறை பெற்றிருக்கின்றன. அன்னாரின் மறைவுக்கும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.சரத்குமார் (சமக): தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட குழுவின் உறுப்பினரான பங்காற்றியவர். தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினை 3 முறை பெற்ற பெருமைக்குரிய இவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எனது சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aravana ,leaders , Former,Vice-Chancellor,Aravana,passed ,away
× RELATED மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5...