×

தமிழகத்தில் இருந்து இளம்பெண்கள் சென்றதால் சபரிமலையில் மீண்டும் பதற்றம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பால் போலீசார் திருப்பி அனுப்பினர்

திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற ‘மனிதி’ அமைப்பு பெண்களால், சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கேரள போலீசார்  அப்பெண்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு திருப்பி அனுப்பினர்.  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆந்திரா, கேரளா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சில பெண்கள் சபரிமலை செல்ல  முயன்றனர். ஆனால், கேரளாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளம்பெண்கள் கோயிலுக்கு வருவதை எதிர்த்து பெரும் போராட்டமும், கலவரமும் வெடித்தது. இதனா–்ல், கோயில் பகுதியில் போராட்டங்கள் நடப்பதை  தடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்–்பட்டு, போலீசார் 24 மணி நேரமும் குவிக்கப்பட்டுள்ளனர்.சென்னையை தலைமையிடமாக  கொண்டு  செயல்படும் ‘மனிதி’ என்ற பெண்கள் அமைப்பின் சார்பில் 40 இளம்பெண்கள் நேற்று சபரிமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஐயப்ப தர்ம சேனா, சபரிமலை  கர்ம சமிதி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பேர் கொண்ட பெண்கள் குழு, நேற்று அதிகாலை 3.30 மணியளவில்  கம்பம்மேட்டுக்கு வந்தனர்.

அவர்களை கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் பம்பை அழைத்து சென்றனர். வழியில் சில இடங்களில் அவர்கள் வந்த வாகனங்களை பாஜ.வினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி அவர்கள் அதிகாலை 5.30  மணியளவில் பம்பை அழைத்து செல்லப்பட்டனர். இந்த பெண்களில் 6 பேர் கருப்புஉடையணிந்து, இருமுடி கட்டி கோயிலுக்குள் செல்ல முடிவு  செய்தனர். இதையடுத்து, இருமுடி கட்டித் தரும்படி  அங்கிருந்த  பூசாரிகளை அணுகினர். ஆனால், பூசாரிகள் மறுத்து  விட்டனர். பின்னர் 6 பேரும் தாங்களாகவே  இருமுடி கட்டி கொண்டனர்.  இந்த தகவல் அறிந்ததும் அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள்  திரண்டனர்.  அவர்கள் மனிதி அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தரையில் அமர்ந்து  நாம ஜெப  போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குறைந்த   எண்ணிக்கையில் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. போராட்டம் தீவிரமானதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.  மேலும், தமிழக பெண்களை தடுப்பதற்காக பக்தர்கள் தொடர்ந்து அங்கு குவிந்தபடி இருந்தனர். இதனால், போலீசார் அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘இந்து அமைப்பினரின்  போராட்டம் தீவிரம் அடைந்து  வருவதாலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக  இருப்பதாலும் சன்னிதானம் அழைத்து செல்ல வாய்ப்பு இல்லை’  என்று கூறினர். ஆனால், ‘என்ன நடந்தாலும் தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டோம்’  என்று பெண்கள் கூறினர்.

 இந்நிலையில், காலை 11.45 மணியளவில் போலீசார்  போராட்டம் நடத்திய பக்தர்களை திடீரென கைது செய்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், பக்தர்கள் பலர் தரையில்  படுத்து போராட்டம் நடத்தினர். அவர்களை  போலீசார்  வலுக்கட்டாயமாக பிடித்து  ஜீப்பில் ஏற்றினர். அப்போது, 11 பெண்களும் திடீரென  எழுந்து சன்னிதானம் நோக்கி ஓடினர். போலீசாரும் அவர்கள்  பின்னால் ஓடினர்.  ஆனால், 100 மீட்டர் செல்வதற்குள் தரிசனம் முடிந்து  சன்னிதானத்தில் இருந்து பம்பை திரும்பிய 200க்கும் மேற்பட்ட பக்தர்கள்  அங்கு திரண்டனர். அவர்களை மலைக்கு செல்ல விடாமல் நாம ஜெபம் கூறியவாறு வழி  மறித்தனர். இதனால் பயந்து போன பெண்கள், மீண்டும் பம்பையை நோக்கி ஓடினர். ேபாலீசார் அவர்களை பம்பை  கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சன்னிதானம் எஸ்பி  கார்த்திகேயன் பேச்சுவார்த்தை  நடத்தினார். தற்போது, பதற்றமான சூழ்நிலை  நிலவுவதால் சன்னிதானத்திற்கு அழைத்து செல்ல முடியாது என்றும், போலீசாரால்  பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் கூறினார். போலீஸ் கட்டுப்பாட்டு அறை முன்பு 100க்கும் மேற்பட்டோர்  திரண்டனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதனால், 11 பெண்களும் தமிழகத்துக்கு திரும்பி செல்ல முடிவு எடுத்தனர். பிறகு, தங்கள் சொந்த  விருப்பப்படி திரும்ப  செல்வதாக போலீசாரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர்.  போலீசார் அவர்களை வேனில் பலத்த பாதுகாப்புடன் தமிழக எல்லை வரை அழைத்துச் சென்று விட்டனர்.
இந்த  சம்பவத்தால் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை  சபரிமலையில் பெரும் பதற்றம் நிலவியது. பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 2 வழக்குகள் பதிவு செய்த போலீசார், 11 பேரை  கைது செய்தனர்.

மனிதி குழுவில் நக்சல்கள்?
பந்தளம் மன்னர் குடும்ப நிர்வாகி சசிகுமார வர்மா கூறுகையில், ‘‘சபரிமலை வந்த தமிழகத்தை சேர்ந்த ‘மனிதி’ அமைப்பில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை புகழை கெடுக்கவே  அவர்கள் சதி திட்டத்துடன் வந்திருப்பதாக சந்தேகம் உள்ளது. இது குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த கோரிக்கை
கேரள மாநில பாஜ மாநில தலைவர் தரன்பிள்ளை கோட்டயத்தில் அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் பினராய் விஜயனின் அலுவலகத்தில இருந்து வழங்கப்பட்ட அறிவுரைபடியே ‘மனிதி’ அமைப்பினர் சபரிமலை வந்துள்ளனர்.  சபரிமலையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட சதியாக இது  இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்.  சபரிமலை வந்த ‘மனிதி’ அமைப்பினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல’’ என்றார்.

நடை அடைக்க அறிவுறுத்தல்
‘மனிதி’  அமைப்பை சேர்ந்த பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய பம்பை வந்தனர். இதையடுத்து, பந்தள மன்னர் பிரதிநிதி சசிகுமார வர்மா தந்திரி கண்டரர் ராஜீவரரை தொடர்பு  கொண்டு, சபரிமலையில் ஆச்சார  விதிமீறல் நடந்தால் கோயில் நடையை சாத்தி விடும்படி கூறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியது.

வன்முறை களமாக்க சதி
கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா (காங்கிரஸ்) கூறுகையில், ‘‘சபரிமலையை வன்முறை களமாக்க கேரள அரசு சதி செய்து வருகிறது. ‘மனிதி’ அமைப்பினர் சபரிமலை வந்ததில் மர்மம் இருப்பதாக சந்தேகம்  உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து செயல்படா விட்டால் விளைவு விபரீதமாகும்’’ என்றார்.

மீண்டும் வருவோம்
தமிழக எல்லையில் கேரள போலீசார் விட்ட பிறகு ‘மனிதி’ ஒருங்கிணைப்பாளர் செல்வி அளித்த பேட்டியில், ‘‘தொடக்கத்தில் இருந்தே கேரள போலீசார் எங்களை சன்னிதானம் அழைத்து செல்லும் எண்ணத்துடன்  செயல்படவில்லை. உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால், கடைசியில் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வலுக்கட்டாயமாக எங்களை திருப்பி அனுப்பினர். ஆனால், நாங்கள் மீண்டும்  வருவோம்’’ என்றார்.

திக் திக் நிமிடங்கள்
அதிகாலை 2 மணி: மனிதி அமைப்பினர் கேரள எல்லைக்குள் நுழைந்தனர். அவர்கள் வாகனத்தை வழிமறிக்க சிலர் முயன்னர்.
3.40 மணி: மனிதி அமைப்பினர் வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கலை அடைந்தது.
4.30 மணி: மனிதி அமைப்பினர் பம்ைபயை அடைந்தனர். பம்பையில் குளித்து இருமுடி கட்டு நிரப்ப சென்றனர்.
5 மணி: இருமுடி கட்டு நிரப்ப பூசாரிகள் மறுத்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
6 மணி: பெண்கள் தாங்களாகவே இருமுடி கட்டை நிரப்பினர்.
6.30 மணி: பம்பையில் பக்தர்கள் திரண்டு மனிதி அமைப்பினரை செல்ல விடாமல் நாம ஜெப போராட்டம் தொடங்கினர். மனிதி அமைப்பினரும் அங்கேயே தரையில் அமர்ந்தனர்.
11.30 மணி: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
11.45: ‘மனிதி’ அமைப்பினர் சன்னிதானம் நோக்கி ஓடினர்.
11.50: சன்னிதானத்தி–்ல் இருந்து வந்த  பக்தர்கள் அவர்களை மடக்கினர்.
11.55: பக்தர்கள் திரண்டு வருவதை பார்த்த பெண்கள் திரும்ப ஓட்டம் பிடித்தனர்.
12.10: போலீசார் அவர்களை பாதுகாப்படன் ஜீப்பில் ஏற்றி பம்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றனர்.
பகல் 1 மணி: போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை திரும்ப அழைத்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rescuers ,Sabarimala ,girls ,Tamilnadu , young girls ,Tamilnadu,Sabarimala, fierce opposition
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு