×

தனுஷ்கோடியை கடல் கொள்ளை கொண்ட தினம் இன்று...

ராமேஸ்வரம்: கோர தாண்டவம் ஆடிய புயலுக்கு தனுஷ்கோடி முற்றிலும் சிதைந்து இன்றோடு 54 ஆண்டுகளாகிறது. கடலில் மூழ்கிய தனுஷ்கோடி நகரம் தற்போது மெல்ல மெல்ல புத்துயிர் பெற்று வருகிறது. தலைமன்னார் வரை சாலை போக்குவரத்து, தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைய உள்ளது. மேலும், புயல் சிதைத்த கட்டிடங்களும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் வர்த்தக மற்றும் சுற்றுலா நகராக புகழ் பெற்று வந்த தனுஷ்கோடி, 54 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (டிசம்பர் 23) வீசிய புயல் காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. 1964ம் ஆண்டு அந்தமான் கடல் பகுதியில் உருவான புயல், டிச.23ம் தேதி நள்ளிரவு துவங்கி மறுநாள் அதிகாலை 4 மணி வரை ராமேஸ்வரம் தீவை பலமாக தாக்கியது. மணிக்கு 280 கி.மீ. வேகம் என வீசிய புயல் காற்று,  தனுஷ்கோடி நகரத்தை சின்னாபின்னமாக்கியது. அந்த நகரமே கடலுக்குள் மூழ்கியது. நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு அருகில் சிக்னலுக்காக காத்திருந்த பாசஞ்சர் ரயிலும் புயலுக்கு தப்பவில்லை. 21 அடி உயர ராட்சத அலை, அப்படியே ரயிலை புரட்டி கடலுக்குள் போட்டது.

அந்த ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட பயணிகள் அனைவரும் உயிரோடு கடலில்  சமாதியாகினர். தனுஷ்கோடியில் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்களும் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயினர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த மக்கள், 2 நாட்களுக்கு பிறகு, கொத்துக் கொத்தாய் சடலங்களாக கரைகளில் ஒதுங்கினர். இந்தப் பேரழிவால், மக்கள் வசதிப்பதற்கு தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இதனால் மனிதர்களின் நடமாட்டமின்றி தனுஷ்கோடி பாலைவனமாக மாறியது. சில ஆண்டுகளுக்கு பிறகு பூர்வகுடி மீனவர்கள் மீண்டும் தனுஷ்கோடியில் குடியேறி மீன்பிடி தொழில் செய்து வாழ துவங்கினர். தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அதிகளவில் இங்கு செல்ல துவங்கினர்.

இதனால் கடந்த ஆண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை, வாகனங்கள் செல்லும் வகையில் மத்திய அரசால் ரூ.60 கோடி செலவில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. புயலால் சேதமடைந்த சர்ச் உள்ளிட்ட கட்டிடங்களை நினைவுச்சின்னமாக பாதுகாத்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இங்கு கண்காட்சியகம் அமைக்கப்படுகிறது. மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை, தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சாலை போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.தவிர மத்திய, மாநில அரசுகளால் சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களையும் தனுஷ்கோடியில் செயல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanushkodi ,sea robbery , Dhanushkodi, sea robbery ...
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்