×

புதிய பயிற்சியாளருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்: மிதாலி ராஜ்

டெல்லி: புதிய பயிற்சியாளருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலிராஜ். 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர். குறைந்த வயதில்(17) சதம் அடித்த பெருமைக்குரியவர். இந்நிலையில், பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த மிதாலி ராஜ், பிசிசிஐக்கு அனுப்பிய இமெயிலில், பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். ரமேஷ் பவாரும் மிதாலி மீது புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவி காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை. இதையடுத்து, புதிய பயிற்சியாளராக டபுள்யூ.வி.ராமன் நியமிக்கப்பட்டார்.

ரமேஷ் பவாரை போல் மிதாலியும் புறக்கணிக்கப்படுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஒருநாள் போட்டி அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி-20 அணியிலும் மிதாலி பெயர் இடம்பெற்றுள்ளது. டி-20 அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் மிதாலி ராஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் என்னையும், எனது குடும்பத்தினரையும் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு நியூசிலாந்து தொடரில் கவனம் செலுத்த உள்ளேன். புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டபிள்யூ.வி.ராமனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mithali Raj , Mithali Raj, Indian Women's Cricket Team, BCCI, WV Raman
× RELATED தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி