×

கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் கவிழ்ந்த ராட்சத டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு டேங்கருக்கு எரிவாயு மாற்றம்

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே நேற்று முன்தினம் 18 டன் எடை கொண்ட சமையல் எரிவாயு ஏற்றிச்சென்ற ராட்சத டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10 டன் எடை அளவில் காஸ் பாதுகாப்பாக மற்றொரு டேங்கருக்கு மாற்றும் பணி நடந்தது. மீதமுள்ள காஸ் இன்று மாற்றப்படும் என தெரிகிறது.சென்னை அடுத்த அத்திப்பட்டில் இருந்து நேற்று முன்தினம்  அதிகாலை 18 டன் எடை  காஸ் நிரப்பிய டேங்கர் லாரி ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு புறப்பட்டது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே, திடீரென லாரி கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்து லேசாக காஸ் கசிய தொடங்கியது. இது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க டேங்கர் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகில்  எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததுடன், சமையல் செய்யவும் அதிகாரிகள் தடைவிதித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து, அத்திப்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். டேங்கரில் இருந்து குழாய்கள் மூலம் மாற்று டேங்கர்களில் காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை 3 டன் காஸ் மட்டுமே மாற்றப்பட்டது. அதன்பிறகு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2வது நாளான நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து அவசர மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. குழாய்கள் மூலம் காற்று மற்றும் தண்ணீர் கலந்து விபத்திற்குள்ளான டேங்கருக்குள் செலுத்தி, அதன்மூலம்  எரிவாயுவை உறிஞ்சி  மாற்று டேங்கரில் நிரப்பும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு வரை நீடித்தது. நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த பணியில் மொத்தம் 10 டன் காஸ் மிகவும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது.இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான டேங்கரில் 18 டன் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. 10 டன் காஸ்  எடுக்கப்பட்டுள்ளது. ஒரு டன் அளவுக்கு காஸ் கசிந்து வீணாகி இருக்கலாம். மீதமுள்ள காஸ் எடுக்கும் பணி நாளை (இன்று) தொடரும். காற்றில் கலந்த காஸ் கசிவினால் ஏற்பட்டுள்ள விபரீதங்களை தடுக்கும் வகையில் குடியிருப்புகளில் தீப்பற்ற வைக்கவோ அல்லது மின்சாரத்தை பயன்படுத்தவோ தடைவிதித்துள்ளோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Giant Tanker Larry ,Gummidipoondi , Ginger transfers ,o another tanker , Giant Tanker Larry, collapsed , Gummidipoondi
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...