×

கணினியை கண்காணிக்க உத்தரவு ஹிட்லரின் பாசிசப் பாதையில் பயணிப்பதற்கு எடுத்துக்காட்டு : மோடி அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து கணினியையும் கண்காணிக்கலாம் என பாஜ அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: ஹிட்லரின் பாசிசப் பாதையில் மோடி அரசு பயணிக்கிறது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, தனிநபர் அலைபேசி தகவல்கள் உள்ளிட்ட நாட்டின் எந்த கணினியையும் கண்காணிக்கலாம் என பாஜ அரசு பிறப்பித்துள்ள உத்தரவு. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள ஆணையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ன்படி, விசாரணை மற்றும் உளவு அமைப்புகள் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்தலாம் என  கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குனரகம், சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, ‘ரா’ உளவு அமைப்பு, சமிக்ஞை புலனாய்வு இயக்குனரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகிய 10 அமைப்புகளுக்கு நாட்டின் கணினிகளை கண்காணிக்கும் அதிகாரத்தை பாஜ அரசு வழங்கி இருக்கிறது. இந்த விசாரணை அமைப்புகள் கோரும் தகவல்களை தர மறுப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மோடி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசியல் சட்டம் அனுமதித்து இருக்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2009ன் விதிகளில் நாட்டின் பாதுகாப்புக்காக முன்அனுமதி பெற்று குடிமக்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களை ஆராய வழியுள்ளது. எனினும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கும் இந்த ஆணை பிரதமர் மோடி நாட்டை சர்வாதிகார முறையில் ஆள விரும்புவதையே அடையாளம் காட்டுகிறது. பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிப்பதாகவும் அமைந்துள்ள மோடி அரசின் இந்த உத்தரவை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்த்து முறியடிக்கவேண்டும்.

சமக தலைவர் சரத்குமார்: 5 மாநில தேர்தல்களில் தோல்வியுற்ற மக்கள் விரோத பாஜ அரசு, 2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மக்களின் எண்ணங்களை நேரிடையாக அறிய  கணினி கண்காணிப்பு செய்ய உத்தரவிட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. குடிமக்களின் தனிமனித உரிமையையும், சுதந்திரத்தையும் பறிக்கும் செயல்.
ஏற்கனவே சிபிஐ, நீதிமன்ற தலையீடுகள், ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் என  ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வரும் மத்திய அரசு, குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களையும் கண்காணித்து ஜனநாயத்தை முழுமையாக அழிக்கும் செயலை கைவிட வேண்டும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தோல்வியை தழுவ இருக்கும் சூழலில், அவசர அவசரமாக வழங்கப்பட்ட இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Examiner ,Hitler ,government ,Modi ,leaders , Examiner to monitor, machine For example, condemn Hitler's fascist path, leaders , Modi government condemned
× RELATED ஹிட்லரின் கோயபல்சையும் மிஞ்சும் மோடி...