அகமதாபாத்: ‘டிஜிபி, ஐஜிக்கள் மாநாடு நாட்டின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே டிஜிபிக்கள், ஐஜிக்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் வந்தார். வதோதரா விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின்படேல் ஆகியோர் வரவேற்றார்.
பின்னர், மாநாடு நடைபெறும் பகுதிக்கு மோடி சென்றார். அப்போது கடந்த அக்டோபர் 31ல் தான் திறந்து வைத்து உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டார். சிலைக்கு மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தில், ‘டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும்’ என்று கூறியுள்ளார்.
படேல் சிலையை பார்க்க நாட்டு மக்களுக்கு அழைப்பு
பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புக்கான அவரது பங்கு மிகப்பெரியது. மக்கள் உலகின் மிகப்பெரிய சிலையை பார்வையிட வேண்டும். நான் உங்கள் அனைவரையும் விசேஷமாக வலியுறுத்துகிறேன். நீங்கள் ஒற்றுமையின் சிலையை பார்வையிட வேண்டும். மேலும், சில நண்பர்கள் டெல்லி-மும்பை விமானத்தில் செல்லும்போது வல்லபாய் படேல் சிலை தெரிவதாக கூறினார்கள். நீங்கள் அடுத்த முறை விமானத்தில் பயணிக்கும்போது சிலை தெரிகிறதா என பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
காந்திநகரில் உள்ள அடலாஜ் கிராமத்தில் பாஜ மகளிர் பிரிவு சார்பில் தேசிய மாநாட்டு நடந்து வருகிறது. மாநாட்டின் கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திரமோடி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி