×

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை: போலீஸ் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு: திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் விவசாயிகள் செல்வதை தடுக்க, நுழைவு வாயில் இரும்பு கதவுகளை போலீசார் இழுத்து மூடினர். அதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 5 நபர்களை மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்க முடியும் என போலீஸ் தெரிவித்தனர்.

ஆனால், நிலங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளும் கலெக்டரை சந்தித்து மனுக்களை அளிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு, இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தர்ணா நடந்த இடத்துக்கு கலெக்டர் நேரில் வந்து விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது, விவசாயிகளை அச்சுறுத்தி, அத்துமீறி நிலங்களில் கற்களை பதித்துவிட்டு, விரும்பி நிலங்களை தருவதாக அரசு தெரிவிப்பது தவறான தகவலாகும். எங்களுடைய நிலங்களை தருவதற்கு விருப்பமில்லை என்பதை தனித்தனியே மனுவாக அளிக்கிறோம் என்றனர். அந்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பெற்றுக் கொண்டதார். அதைத்தொடர்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மூதாட்டி கதறல்
கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தபோது, செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த காசியம்மாள்(63) என்பவர், தன்னுடைய 7 ஏக்கர் விளை நிலமும் ரோடு போடுவதற்காக பறிபோகிறதே என கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதார். அப்போது, போலீசார், அந்த மூதாட்டியை இழுத்துச்சென்று வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Tiruvannamalai , Chennai, -Sellam, 8 Pavilion project, Thiruvannamalai
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்