×

மீன் கடைகளை அகற்றும் மாநகராட்சியின் முடிவை கண்டித்து லைட்ஹவுஸ் அருகே மீனவர்கள் சாலை மறியல்: 200க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை கடைகளை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து, களங்கரை விளக்கம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.  ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்ட விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவை சுத்தப்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். அதன்படி, கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் ஒரே வரிசையில் இருக்கும்படி ஒழுங்குபடுத்தப்பட்டது.

பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 17ம் தேதி காலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அதிகாரிகள் 20 பேருடன் மெரினா கடற்கரையில் ஆய்வு செய்தார். அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மீன் கடைகளையும் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடற்கரை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை மாற்று இடத்தில் வைக்க திட்டம் வகுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இதற்காக, மயிலாப்பூரில் உள்ள ரஷ்ய துணை தூதரகம் அருகே நவீன வசதிகளுடன் மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நொச்சிகுப்பம் மீனவர்கள் பூர்வீகமான இடம் எங்களுக்கே சொந்தம் என்று கூறி மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் மேற்பட்டோர் மீனவர்கள் கலங்கரை விளக்கம் அருகே உண்ணாவிரத  போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி மீனவர்கள் அனைவரும் நேற்று காலை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் நடைபெறும் இடம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரும் திடீரென சென்னை மாநகராட்சி ஆணையரை கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மீன் கடைகளை இங்கிருந்து அப்புறப்படுத்த மாட்டோம் என்று உறுதி  அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர்  அனைவரையும் அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து ைவத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Lighthouse ,City Corporation ,fish shops , Fish shops, corporation, light house, fishermen, road stroke
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...