×

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் ஆதாயம் தேட கூறப்படுபவை : சட்டீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ‘செக்ஸ் சிடி’ வழக்கில் தொடர்புடைய விநோத் வர்மா என்பவருக்கு, முதல்வரின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நடத்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜ ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகெல் முதல்வராக பதவியேற்றார். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சட்டீஸ்கர் போலீசார், முதல்வர் பகெலின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான விநோத் வர்மாவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து பாஜ அமைச்சர் ஒருவரின் ‘செக்ஸ் சிடி’க்கள், ஆபாச பட பென் டிரைவ்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக தற்போதைய முதல்வர் பூபேஷ் பகெல் மீதும் வழக்கு பதிவானது. இதன் எதிரொலியாக பாஜ மாநில தலைமை, அமைச்சர் கைலாஷ் மொரார்காவை கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால், பகெல் இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். ஜாமீனில் வெளியாவதை மறுத்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் இருந்தார். கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, கடந்த செப்டம்பர் மாதம், ராய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில்,  சட்டீஸ்கர் மாநில காங்கிரஸின் முன்னாள்  தலைவரும், இன்னாள் முதல்வருமான பூபேஷ் பகெல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, பூபேஷ் பகெலை 14 நாள்கள், அதாவது கடந்த அக்டோபர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 24ம் தேதி உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார். செக்ஸ் சிடியை புழக்கத்தில் விட்ட விவகாரத்தின் பின்னணியில் விநோத் வர்மா இருந்த நிலையில், அவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் ேசர்ந்து, அக்கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்.

அவருடன் மற்றொரு பத்திரிகையாளரான ருசீர் கார்க் என்பவரும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பகெலுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், சட்டீஸ்கர் மாநில முதல்வரின் பொதுநிர்வாக பிரிவு சார்பில், முதல்வருக்கான 4 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  அதில், முதலாவதாக ‘செக்ஸ் சிடி’ வழக்கில் ெதாடர்புடைய விநோத் வர்மா, முதல்வரின் அரசியல் ஆலோசகராகவும், ருசீர் கராக் மீடியா அட்வைசராகவும், பிரதீப் சர்மா திட்டம், விவசாயம், கொள்கை முடிவு, காவல்துறை ஆலோசகராகவும், ராஜேஸ் திவாரி சிறப்பு ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பூபேஷ் பகெல் மீதும் ‘செக்ஸ் சிடி’ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதேவழக்கில் தொடர்புடைய சிலருக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஆளுங்கட்சி தரப்பில், முந்தைய பாஜ அரசு, அரசியல் ஆதாயங்களுக்காக ‘செக்ஸ் சிடி’ வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இணைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பூபேஷ் பகெல் கூறுகையில், ‘‘என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் என்னைப் பாதிக்கவில்லை. அவை அரசியல் ஆதாயம் தேட கூறப்படுபவை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Chhattisgarh , Chhattisgarh, Vinoth Verma, Chief Minister Bhupesh Baghel
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?