×

விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் : தமிழக விவசாயிகள் கேரளாவில் ஆய்வு

திருவனந்தபுரம் : தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படும் மின்கோபுரம் கேரள மாநிலத்தில் சாலையோரம் பூமிக்கு அடியில் கேபிளாக பதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கேரள மாநிலத்தில் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என தமிழக விவசாயிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து திருப்பூருக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்து அங்கிருந்து தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரத்தை பிரித்து வழங்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விளை நிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் திருப்பூரில் 5வது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இதே திட்டமானது சாலையோரம் கேபிள் அமைத்து செயல்படுத்துவதாக தகவல் வெளியானது. பாலக்காடு முதல் கொச்சின் வரையிலான பாதையில் சாலையோரம் புகைமின்வழிப்பாதை அமைத்து நிலத்தின் உள்ளே கேபிள் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அறிந்த தமிழக விவசாயிகள் சுமார் 15 பேர், கேரளாவிற்கு நேரடியாக சென்று கேபிள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்த ஆய்வறிக்கையை அமைச்சர் தங்கமணிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். முதலில் கேரளாவிலும் விளை நிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டப்பணிகள் நடைபெற இருந்ததாகவும், ஆனால் கேரள அரசு கடுமையாக எதிர்த்ததன் காரணமாக சாலையோரம் வழியாக அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் உரிய அழுத்தம் கிடைக்காததால் மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farmland ,Kerala ,Tamil Nadu , Minkopuram,Minister thangamaniFarmers struggle, Power Grid Company
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...