×

ஆலங்குளம் அருகே பசு வயிற்றில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் : கால்நடை மருத்துவர்கள் சாதனை

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் கருப்பசாமி. விவசாயியான இவருக்கு சொந்தமான பசு மாடு, கடந்த ஒரு வாரமாக உணவு சாப்பிடாமல் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து பசுமாட்டை சிகிச்சைக்காக, வெண்ணிலிங்கபுரம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், உணவு ஜீரணமாக சிகிச்சை அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து இரை உண்ண முடியாமல் அவதிப்பட்டது. இதையடுத்து நெல்லையில் உள்ள தலைமை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரை செய்தார்.

ஆனால் பசு பலமிழந்து காணப்பட்டதால் நெல்லை மண்டல இணை இயக்குநர் ஜெயக்குமார், தென்காசி கோட்ட உதவி இயக்குநர் முருகையா ஆகியோருக்கு கால்நடை மருத்துவர் தகவல் அளித்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாயி வீட்டிலேயே அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரினார்.  இதற்கு அனுமதி கிடைத்ததும் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருத்துவர் ராஜேஷ், நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம் மற்றும் ஊத்துமலை  கால்நடை மருத்துவர் ரமேஷ் கொண்ட குழு அமைக்கப்பட்டு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பசுவின் வயிற்றில் இருந்து 4 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கயிறுகள், ரப்பர் டயர் டியூப்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட போன்ற ஜீரணமாகாத பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் மாடு சகஜ நிலைக்கு திரும்பியது.  இதுவரை கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சையை நெல்லை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள அரசு கால்நடை மருத்துவர்கள் செய்து வந்தனர். ஆனால் கிராமங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து பசுவின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து கால்நைட மருத்துவர்கள் கூறியதாவது: மாடுகள் பராமரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்த வேண்டும். சத்து பற்றாக்குறை மற்றும் குடற்புழு இருந்தால் பாலிதீன் பைகளை உண்ணும். எனவே அரசு கால்நடை மருத்துவமனைகளில் தாது உப்பு, குடற்புழு நீக்க மருந்து வழங்கபடுகிறது. இதனை மாடு வளர்ப்போர் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alankulam , Alankulam, cows, plastic products, veterinarians
× RELATED ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!