திருமயம்: அரிமளம் அருகே புயலால் சாய்ந்த 5 தலைமுறைக்கு மேலாக நிழல் கொடுத்த ஆலமரம் அப்பகுதி மக்களால் மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயலில் மா, பலா, தேக்கு, தைலமரம், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட எந்த ஒரு மரமும் தப்பவில்லை. இதில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாதி முறிந்தும் காணப்பட்டது. தற்போது சேதமடைந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட மரங்களில் பல மரங்கள் நூறு வயதை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பழம் பெருமிக்க மரங்கள் அழிந்ததால் அப்பகுதி அடையாளமே அழிந்துவிட்டதாக வேதனையடைந்து வரும் நிலையில் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி கிராமத்தில் 5 தலைமுறைக்கு மேல் மக்களை கண்ட ஆலமரம் ஒன்று அப்பகுதி மக்களால் உயிர் பெற்றுள்ளது.
இது பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நெடுங்குடி பள்ளி அருகே உள்ள இந்த ஆலமரம் பல தலைமுறைகளை கண்டது. எங்களது கிராமத்து முதியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் இதன் விழுதுகளில் தவழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஆலமரம் கடந்த மாதம் வீசிய புயலில் சாய்ந்தது. இச்சம்பவம் எங்கள் கிராம மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சாய்ந்த ஆலமர கிளைகள் அகற்றபட்ட நிலையில் பெரிய அளவுள்ள மரத்தின் ஒரு சில பகுதிகள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இதனால் அதே இடத்தில் மரத்தை மீண்டும் நடவு செய்தால் துளிர்க்க வாய்ப்புள்ளது என கருதி எங்கள் கிராம மக்கள் பண உதவியுடன் இரண்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு தற்போது மரம் விழுந்த இடத்தில் மீண்டும் நடப்பட்டுள்ளது. இந்த மரம் மீண்டும் வளர்ந்து எதிர்கால தலைமுறைகளை அதன் விழுதில் ஊஞ்சல் ஆட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி