×

எட்டயபுரம் பகுதியில் மழை இல்லாததால் தண்ணீர் ஊற்றி நிலக்கடலை பறிக்கும் அவலம் : விவசாயிகள் வேதனை

எட்டயபுரம்: எட்டயபுரம் பகுதியில் மழை இல்லாததால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் தண்ணீர் ஊற்றி கடலை பறிக்கின்றனர். இரு மடங்கு செலவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எட்டயபுரம் தாலுகாவில் அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரி நிலங்களில் சுமார் 400 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். ஆடிப்பட்டத்தில் பயிரிட்ட விவசாயிகள் ஆரம்பகாலத்தில் மழை நன்றாக பெய்ததால் மகிழ்ச்சியில் இருந்தனர். செடிகளும் நன்றாக வளர்ந்தது. இதற்காக விவசாயிகள் வங்கிகளில் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் களை எடுத்து, உரமிட்டு, மருந்து தெளித்தனர். நன்றாக விளைந்து கிடைக்கும் லாபத்தில்  கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

ஆரம்பத்தில் நன்றாக பெய்த மழை கார்த்திகை மாதத்தில் சுத்தமாக பெய்யவில்லை. இதனால் கடலை நன்றாக மணி பிடிக்காமல் திரட்சி இல்லாமல் போனது.
இந்நிலையில் விளைந்தது லாபம் என்ற எண்ணத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் மழையின்றி மண் இறுகி போனதால் கடலை செடிகளை பிடுங்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் கடலை பிடுங்குவதற்கு தலைச்சுமையாகவும், டிராக்டர் மற்றும் வேன் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து ஒவ்வொரு செடிகளாக ஊற்றி மண்ணை ஈரப்படுத்தி அதன்பின் கடலையை பிடுங்குகின்றனர். இதனால் ஒன்றுக்கு இரண்டாக செலவு செய்ய வேண்டியுள்ளதாக விவசாயிகள் நஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிடுங்கிய செடிகளில் கடலைகளை காட்டில் வைத்தே பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. தண்ணீர் ஊற்றி பறிப்பதால் ஈரத்தோடு பிரித்தெடுக்க காலதாமதமாகிறது.

எனவே கோவில்பட்டி தாலுகா இளையரசனேந்தல் பகுதியில் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல் எட்டயபுரம் பகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறியதாவது, எட்டயபுரம் தாலுகா விவசாயிகள் இந்த வருடம் சுமார் 75 சதவிகிதம் மக்காச்சோளம் பயிரிட்டனர். குருத்துப்புழு தாக்கியதால் அதிக பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் எட்டயபுரம் தாலுகா அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டனர். கார்த்திகை மாதம் முழுவதும் மழை பெய்யாததால் கடலை விளைச்சலும் சரியில்லை. எனவே நடப்பு ஆண்டில் எட்டயபுரம் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறுடன் நிலக்கடலைக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Ettayapuram ,ground , Ettayapuram, rain, water, farmers
× RELATED பொன்னமராவதி பகுதியில் 2 நாட்களாக மிதமான மழை