×

பெண் குழந்தைகளை பாதுகாக்க 1.94 லட்சம் மாணவிகள் பெற்றோருக்கு கடிதம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய முயற்சியாக, பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி, 1.94 லட்சம் மாணவிகள் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதி அனுப்பினர். திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், தேசிய மற்றும் மாநில சராசரியைவிட வெகுவாக சரிந்து வருகிறது. அதையொட்டி நடந்த ஆய்வில், பெண் சிசுக் கொலை, பெண் சிசுக்களை கருவில் கண்டறிந்து அழித்தல், பெண் குழந்தைகள் திருமணம் என சமூக அநீதிகள் நடப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என தாய்மார்களிடம் கற்பூர உறுதியேற்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து, ‘என் கனவு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் புதுவிதமான முயற்சி நேற்று நடந்தது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 2,508 பள்ளிகளில், 1,94,940 மாணவிகள் நேற்று ஒரே நேரத்தில் கடிதம் எழுதினர்.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நீதிபதி க.மகிழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், சார்பு நீதிபதி ராஜ்மோகன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.லட்சுமி, முதன்மை சார்பு நீதிபதி என்.ஸ்ரீராம், மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு திரண்டிருந்த 5 ஆயிரம் மாணவிகள், தங்களுடைய பெற்றோருக்கு அஞ்சல் அட்டையில், ‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சல் பெட்டியில் செலுத்தினர்.
மேலும், எழுதிய கடிதங்களை ஆர்வமுடன் கலெக்டரிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.

கடிதத்தில், ‘அக்காவின் படிப்பை பாதியில் நிறுத்தியதை போல என் படிப்பையும் பிளஸ் 2 படித்த உடன் நிறுத்திவிடாதீர்கள், தொடர்ந்து படிக்க வைக்கவும், பெண் குழந்தையையும் ஆண் குழந்தை போல சரிசமமாக நடத்தவும், படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என ஒவ்வொரு மாணவியும் தங்களுடைய எண்ணங்களையும், ஏக்கங்களையும் பெற்றோருக்கு எழுதியிருந்தது’ உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது: ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 1.94 லட்சம் மாணவிகள், தங்களுடைய விருப்பங்களையும், பெற்றோர் தங்களை எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கடிதமாக எழுதி அனுப்பும் நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த கடிதத்தை படித்த பிறகு, தாய் தந்தையரிடம் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். சிறந்த கடிதங்களை எழுதிய மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parents ,babies ,Thiruvannamalai district , Students, letter, Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...