×

ஆத்தூர் அருகே, 50 ஆண்டுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செல்லியம்மன் சிலை கிணற்றில் மீட்பு

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, 50 ஆண்டுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செல்லியம்மன் சிலை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் வசிஷ்ட நதி உள்ளது. இந்த நதிக்கரையோரத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. வசிஷ்ட நதியின் அருகே உள்ள கிணற்று தண்ணீரை விவசாய தோட்டங்களுக்கு கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிணற்றினை யாரும் பயன்படுத்தாத நிலையில் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த கிணற்றை தூர்வார கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கிணற்றில் தூர் வாரும் பணி தொடங்கிது. அப்போது, நள்ளிரவு நேரத்தில் கிணற்றினுள் அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. அதனை கிராம மக்கள் மீட்டெடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அதனை ஆராய்ந்தபோது கடந்த 50 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு கிணற்றில் தவறி விழுந்தது என தெரிய வந்தது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுக்கு முன்பு வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது, நதியின் அருகே இருந்த செல்லியம்மன் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து சிலைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. ஊரில் திருவிழா நடக்கும்போது நதிக்கரையில் உள்ள கோயிலில் இருந்துதான் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கும். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுக்கு முன்பு மீண்டும் நதிக்கரையின் ஓரத்தில் கோயில் ஒன்றை அமைத்து அங்கு சுவாமி சிலைகளை வைத்துள்ளோம். இந்நிலையில், ஊர் கிணற்றை தூர்வாரியபோது கடந்த 50 ஆண்டுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செல்லியம்மன் கற்சிலை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு வந்துள்ளோம் என்றனர். இந்த சிலையை கிராம மக்கள் தேர்முட்டி என்னுமிடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள், வழிபாடு செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adoor ,Chelliyamman ,well , Athur,Statue, well
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...