அதிமுக கட்சி விழா அரசு விழாவானது ‘சரித்திர நாயகன்’ பட்டத்தை அமைச்சருக்கு சூட்டிய டிஆர்ஓ: அறிவிப்பாளராக மாறிய டிஎஸ்பி

மதுரை:   மதுரையில் எய்ம்ஸ் அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும்  கூட்டம் அதிமுக அம்மா பேரவை சார்பில் நேற்று தோப்பூரில் நடந்தது. பேரவை செயலாளர் அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார்.  மேடையில் டிஆர்ஓ குணாளன், ஆர்டிஓ முருகேசன், திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.மதுரை டிஆர்ஓ குணாளன் பேசுகையில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான மின்சாரத்தை பெற துணை மின் நிலையம் அமைக்கப்படும். இந்த எய்ம்ஸ்  மருத்துவமனை மதுரையில் அமைய பாடுபட்ட ‘சரித்திர நாயகன்’ அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நடத்தும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச வாய்ப்பு அளித்தமைக்கு வணங்குகிறேன்’’ என்றார்.

 டிஆர்ஓ,வின் புகழாரத்தை பொறுக்க முடியாத அமைச்சர் உதயகுமார், ‘‘கட்சி விழாவைத்தாண்டி, அரசு விழாவாக கருதியதால்தான் டிஆர்ஓ இங்கே மேடையில் பேசி இருக்கிறார்’’ என விளக்கம் அளித்தார். இதற்கிடையில், இங்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி, ராமகிருஷ்ணன் மேடைக்கு கீழே நின்றபடி, ஒரு மைக்கை வாங்கி, ‘‘பெண்களும் ஆண்களும் வரிசையாகப் போய், பரிசுப்பொருட்களை வாங்கிச் செல்லுங்கள். பின்பு அழைத்து  செல்லும் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள்’’ என்று ஒரு அதிமுக அறிவிப்பாளரைப்போலவே பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி நடந்தபோதும், சிவகங்கை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் நிகழ்ச்சிக்கு ஆட்களைக் கூட்டி வந்திருந்தனர். ஒரு கவரில் பணம் வைத்தும், ‘ஹாட்பாக்ஸ்’  ஒன்றும் மேடைக்கு அழைத்து விநியோகித்ததும் பரபரப்பை தந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>