×

சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மேலும் ஒரு வழக்கில் சஜ்ஜன் குமார் ஆஜர்

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட மற்றொரு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. தலைநகர் டெல்லியில்  மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.டெல்லியில் ராஜ்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 17ம் தேதி  உத்தரவிட்டது. தண்டனையை  அனுபவிப்பதற்காக வரும் 31ம் தேதிக்குள் சரண் அடையும்படியும் கெடுவும் விதித்துள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  சஜ்ஜன் விலகினார்.

இந்நிலையில், அந்த கலவரத்தின்போது சுல்தான்பூரியில் சுர்ஜித் சிங் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், கலவரத்தை தூண்டியதாக சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து  வருகிறது. இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சாம்கவுர் என்பவர், கடந்த நவம்பர் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், ‘1984ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதி, நான் வீட்டிற்கு வெளியே சென்றேன்,  அப்போது, சஜ்ஜன் குமார் தான் அழைத்து வந்த கும்பலை பார்த்து, ‘எனது தாயை கொன்று விட்டனர். சீக்கியர்களை கொல்லுங்கள்’ என்று கத்தினார்’ என்று சஜ்ஜன் குமாரை அடையாளம் காட்டி சாட்சியம் அளித்தார்.  இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சஜ்ஜன் குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதியிடம் அவர், ‘‘வழக்கில் வாதாடுவதற்காக  எனது பிரதான வழக்கறிஞர் வர இயலவில்லை’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sajjan Kumar ,Sikhs , Riots,Sikhs,case, Sajjan Kumar Azar
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி