×

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம் அடமான பத்திர பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிக்கரணையில் சர்ச்சைக்குள்ளான 20 ஏக்கர்  நிலத்தை 1,350 கோடிக்கு அடமானம் வைப்பது தொடர்பான பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை  பள்ளிக்கரணையில்  சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில் சட்ட விரோதமாக 1,350 கோடி கடன் பெற முயற்சிப்பதாக கூறி, சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில்குமார் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  சதுப்பு நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்யவோ அல்லது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடவோ இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த தடையை நீக்கக் கோரி சம்மந்தப்பட்ட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் பதில் தருமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, அடமானம் வைக்கப்பட உள்ள இந்த நிலம் சதுப்பு நிலம் அல்ல என்று வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்ய சைதாப்பேட்டை சார் பதிவாளருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school marsh , Debt Obligation , Register , Court order
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பரங்கிமலை...