×

மின்கோபுரம் அமைப்பது குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : அமைச்சர் தங்கமணி

திருப்பூர் : உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணம் இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். விளைநிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் திருப்பூரில் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து திருப்பூருக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்து அங்கிருந்து தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரத்தை பிரித்து வழங்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்கள் அழிந்தால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கேரளாவில் உள்ளதை போல் சாலை ஓரம் கேபிள் மூலம் தமிழகத்திலும் மின்சாரப்பாதை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டத்தை மீறி விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிகள் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க அதிக இழப்பீடு தருவதாக அரசு கூறியுள்ளது என்றும், இதற்காக மாநில அரசு, மின்சார வாரியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார். பிறமாநிலங்களை விட அதிக இழப்பீடு தருவதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்று கூறிய அவர், மின் கோபுரம் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் மின் கோபுரம் அமைக்கப்பட உள்ள மாவட்டங்களில் அதுகுறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goldman , Farmland,Power tower,Farmers struggle,Minister thangamani
× RELATED இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் வசதி...