×

சிவரக்கோட்டை மலையூரணியில் முகாமிட்டுள்ள பண்டிங் பறவை : இமயமலை பறவை திருமங்கலம் வருகை, பறவை ஆர்வலர்கள் வியப்பு

திருமங்கலம்: திருமங்கலம் சிவரக்கோட்டை மலையூரணியில் இமயமலையில் வசிக்கக்கூடிய அபூர்வமான ‘பண்டிங்’ வகை பறவைகள் வந்துள்ளது பறவை ஆராய்ச்சியாளர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் மலையூரணி அமைந்துள்ளது. நான்குபுறமும் இயற்கை சூழ்ந்துள்ள இந்த மலையூரணியில் கோடை காலங்களில் கூட தண்ணீர் வற்றாது. காட்டுப்பகுதியில் உள்ள இந்த மலையூரணி பகுதியில் ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் வசித்து வருகின்றன. இதனால் இந்த பகுதிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் பலரும் படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், திருமங்கலத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ரவீந்தரன் நடராஜன் குழுவினர் மலையூரணி பகுதியில் நேற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய வரவாக இரண்டு அபூர்வ வகை பறவைகளை கண்டனர். பண்டிங் இன பறவைகளான இவை இந்த பகுதிக்கு வந்துள்ளது பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த பறவைகள் இமயமலை பகுதியில் வாழும் அபூர்வமான பறவைகளாகும். தற்போது பனி காலமாக இருப்பதால் இந்த பறவைகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து மதுரை சிவரக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளன.

இதுகுறித்து திருமங்கலம் பறவை ஆர்வலர் ரவீந்தரன் நடராஜன் கூறுகையில், ‘‘பொதுவாக வலசை காலங்களில் உலகின் வட பகுதிகளிலிருந்து ஏராளமான பறவைகள் இடம் பெயர்ந்து வருவது வழக்கம். பனி காலங்களில் தங்களின் உணவு தேவைகளுக்காக தென் இந்திய பகுதியை தேடி வருகின்றன. இந்த வகையில் தற்போது முதல்முறையாக இமயமலை பகுதியைச் சேர்ந்த கருந்தலை பண்டிங் தமிழகத்திற்கு விருந்தாளியாக வந்துள்ளது.

அதுவும் திருமங்கலம் சிவரக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதேபோல் செந்தலை பண்டிங் தமிழகத்தில் மூன்றாம் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. பல ஆயிரம் கிமீ தாண்டி இந்த பறவைகள் இங்கு வந்திருப்பது சிவரக்கோட்டை பகுதியில் உள்ள இயற்கை வளத்தை காட்டுகிறது. இந்த பறவைகளுக்கு தேவையான இரை அதிகளவில் இங்கு கிடைக்கின்றன. இவை எத்தனை காலம் இங்கு காணப்படும் என்பதனை ஆராய முடிவு செய்துள்ளோம்,’’ என்றார். இமயமலை பறவைகள் திருமங்கலம் சிவரக்கோட்டை பகுதியில் காணப்பட்டது இயற்கை ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivarakottai Mountain ,Himalayas Bird Sanctuary , Sivarakottai, Banding Bird, Tirumangalam
× RELATED விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள்...