×

பயமுறுத்தும் ஏஞ்சல் வரி மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: ஏஞ்சல் வரி விவகாரம் தொடர்பாக பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறிய அளவு முதலீட்டுடன் தொடங்கப்படுபவை. இவை பங்குகள் மூலம் வெளியில் இருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிறுவனங்களின் நியாய விலையின் மீது முதலீடுகள் பெறப்படுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெறப்படும் நிதிக்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டப்பிரிவு 59 பிரிவு 2ன் படி 30.9 சதவீதம் வரி வசூலிக்கப்படும். 2012ம் ஆண்டு மத்திய அரசு இந்த வரியை அறிமுகம் செய்தது.

சாதாரணமாக ஆண்டுக்கு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து முதலீடு திரட்டுகின்றன. இந்த நிலையில், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2016 ஜனவரியில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, இத்தகைய நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இவற்றுக்கு 3 நிதியாண்டுகளுக்கு வரி விலக்கும் கிடைக்கும். இவை ₹10 கோடி வரை முதலீடு பெறும் வகையில் விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.   இந்த சூழ்நிலையில் வரி நோட்டீஸ் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அங்கீகாரம் பெறாத நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அவசர தீர்வு காண மணிபால் குளோபல் எஜூகேஷன் தலைவர் மோகன்தாஸ் பை, ட்விட்டரில் வேண்கோள் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, ஏஞ்சல் வரி நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ட்விட்டரில் உறுதி அளித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Angel , Angel Tax, Union Minister
× RELATED சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்…