×

சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி உடன்குடி அனல் மின்நிலையம் அனுமதி ரத்துகோரி வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தை அணுக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் எனக்கூறி ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ₹9 ஆயிரம் கோடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அமைக்க முடிவானது. இதற்காக கடந்த 2009ல் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2015ல் அனல்மின் நிலையத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால், அனல் மின் நிலையம் தருவைகுளம் நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்படுகிறது.

ஆலையிலிருந்து ஆண்டுக்கு சுமார் 31 லட்சம் டன் சாம்பல் கிடைக்கும். இதற்குரிய சந்தை வாய்ப்பு இல்லாததால் ேதங்கும். பாய்லரில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 6.30 லட்சம் லிட்டர் வெந்நீர் கடலில் கலக்கும். இதனால், கடலில் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு மீன் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும்.இதனால் மணப்பாடு, ஆலந்தலை, அமலி நகர் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனல் மின்நிலைய புகையால் பதநீர், கருப்பட்டி மற்றும் பனை சார்ந்த பொருட்களின் உற்பத்தி பாதிக்கும். இதனால், சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். உடன்குடி மற்றும் சாத்தான்குளம் வட்டாரத்தில் நிலத்தடி நீர் 100 சதவீதம் பாதித்துள்ளதாக மத்திய அறிக்கை கூறுகிறது.

அருகிலுள்ள குலசேகரபட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியான பகுதியாக உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. எனவே, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின்நிலையத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் சுற்றுசூழல் பாதிப்பு தொடர்பான விவகாரம் என்பதால் மனுதாரர்  பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றனர். இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation ,Green Tribunal , Thermal power plant,affect,environment,permission,claiming Udangud,case, HC Green branch tribunal,ordered,access
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...