×

ரபேல் விமானம், மேகதாது அணை விவகாரத்தால் நாடாளுமன்றம் 6வது நாளாக ஒத்திவைப்பு.. பள்ளி பிள்ளைகளை விட நாம் மோசமா? எம்பி.க்களிடம் சபாநாயகர் வேதனை

புதுடெல்லி: ரபேல் விமானம், மேகதாது அணை விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது. தொடர் அமளியில் ஈடுபட்ட எம்பிக்களிடம், ‘‘நாம் பள்ளிப் பிள்ளைகளை விட மோசமாக இருக்கிறோமா?’’ என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. ரபேல் போர் விமான ஒப்பந்தம், மேகதாது அணை விவகாரத்தால் நடந்த அமளிகளால் கடந்த 5 நாட்களும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 6வது நாளாக நேற்று காலை மக்களவை கூடியதும், காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

மேகதாது அணை தொடர்பாக அதிமுக எம்பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்பி.க்களும் என 30க்கும் மேற்பட்டோர் சபாநாயகரை சுற்றி கோஷமிட்டதால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பிற்பகலில் அவை மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்தது. அப்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘தேர்தலை சந்தித்த பிறகு நடக்கும் இக்கூட்டத் தொடர் அனைவருக்குமே முக்கியமானது. அனைத்து விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனாலும், அமளி செய்வது நல்ல செய்தி அல்ல. நாம் மக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறோம். நம்மை விட பள்ளி மாணவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்பது போன்ற தகவல்கள் எனக்கு வருகின்றன. பள்ளி மாணவர்களை விட நாம் என்ன மோசமா?’’ என வேதனைப்பட்டார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘நாங்களும் விவாதத்திற்கு தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், ரபேல் விவகாரத்தில் அனைத்து ஆவணங்களிலும் முறைகேடு நடந்துள்ளது பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார். ‘‘இது எனது அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை’’ என சபாநாயகர் கூறிய நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவையில்லை என உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியுள்ளது’’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட நாள் முழுவதும் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதேபோல், மாநிலங்களவையில் காலையில் அவை கூடியதும், அதிமுக, திமுக எம்பி.க்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு இடையே, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீசை மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) குலாம்நபி ஆசாத், ‘‘ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அரசு தவறாக வழிநடத்தி உள்ளது. பொய்யான தகவல்களை தந்த அரசு, பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டது. உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல், ‘‘ரபேல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார். அதற்கு முன், ரபேல் விஷயத்திலும், சீக்கியர் வன்முறை வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் விஷயத்திலும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இதனால், இரு தரப்புக்கும் இடையே அமளி முற்றியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அரசு தயாராக இருக்கிறது காங்கிரஸ் தான் ஓடுகிறது
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல், நாடாளுமன்றத்திற்கு வெளியே அளித்த பேட்டியில், ‘‘ரபேல், மேகதாது, ரிசர்வ் வங்கி, சிபிஐ என அனைத்து விவகாரங்களுக்கும் விவாதத்தின் மூலமே தீர்வு காண முடியும். அதற்கு அரசு தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தான் ரபேல் விவகாரத்தில் விவாதத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயந்து ஓடுகிறது. விவாதத்திற்கு தயாராக இல்லாத அவர்கள் முக்கியமற்ற விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர்’’ என்றார்.

பாஜ எம்பிக்கள் கூட்டத்தில் எதிரொலித்த ராமர் கோயில்
பாஜ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ராமர் கோயில் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என உபியை சேர்ந்த எம்பிக்கள் ரவிந்திர குஸ்வாகா, ஹரி நாராயணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதனை பல்வேறு உறுப்பினர்கள் வரவேற்றனர். அவர்களுக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ‘‘ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். எனவே, கட்சி எம்பி.க்கள் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இருவரும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே, ராமர் கோயில் தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டுமென இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பாஜ கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael Air Force ,Meghatadu ,Parliament ,speaker ,school children ,MBs , school children ,Parliament,Raphael Air Force,Meghadad dam,issue,speaker,sorry,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...