×

மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்திற்கு எதிராக கூடுதல் ஆவணம் தாக்கல்

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை கடந்த மாதம் 26ம் தேதி விசாரித்த நீதிமன்றம், டிசம்பர் 18ம் தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை விதித்தது. இந்த கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓபி.ஷைனி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, “மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலர் சேர்க்கப்பட உள்ளனர். அது குறித்து மத்திய அரசிடமும் அனுமதி கேட்க உள்ளோம். அதனால், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். இதே கோரிக்கையை சிபிஐ.யும் முன் வைத்தது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்க முடியாது. இருப்பினும், இருவரையும் வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி வரை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத் துறைக்கு  தடை விதிக்கப்படுகிறது’’ என குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maxis Corporate Scam ,P. Chidambaram , Additional courtesy,Aircel-Maxis,Scam,case,P. Chidambaram
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...